ஏர்போர்ட்டில் நடந்த விஷயம்.. அதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார்.. பாண்டியராஜன் பெருமிதம்!
சென்னை: 80 மற்றும் 90களில் நகைச்சுவை கலந்த கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பாண்டியராஜன். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விமான நிலையத்தில் நடந்த சுவாரசியமான விஷயத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திருட்டு முழியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக்குவிசுக்கு நடை என தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் நடிகர் பாண்டியராஜன். இவரின் படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டியராஜன் அந்த 7 நாட்கள், மெளன கீதங்கள், தூறல் நின்னு போச்சு, விடியும் வரை காத்திரு, இன்று போய் நாளை வா ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

பாண்டியராஜன்: அதன் பிறகு தனியாக கன்னிராசி படத்தை இயக்கினார். இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடியது. இதையடுத்து, ஆண் பாவம் படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 225 நாட்களுக்கும் மேலாக ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின் பல படங்களை இயக்கியும், ஹீரோவாகவும் நடித்த பாண்டியராஜன், தற்போது துணை நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் பிஸி: நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிரித்திவி ராஜன், பல்லவராஜன், மற்றும் பிரேம் ராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் பிரித்திவிராஜன் அண்மையில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ப்ளு ஸ்டார் படத்தில் அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருந்தார். மற்றொரு மகனான பிரேமராஜன் கோட் மற்றும் இந்தியன் 2 படங்களிலும் டிரோன் கேமராமேனாக பணியாற்றியுள்ளார்.
இன்று சினிமாவில் நிலைமை வேறு: இந்நிலையில் பாண்டியராஜன் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், நான் படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கவில்லை. மனதில் ஒரு கரு தோன்ற வேண்டும். அது தோன்றிவிட்டால் படம் எடுக்கலாம். முன்பு ஒரு படத்தை எப்படி எல்லாம் சுவாரஸ்யமாக எடுக்கலாம் என்பதை பற்றி தான் யோசிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போது, நிலைமை அப்படி இல்லை. படத்தை எப்படி ரிலீஸ் செய்வது, மக்களை எப்படி தியேட்டருக்கு கொண்டு வருவது என்பதை பற்றி தான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்றார்.
அதனாலத்தான் அவர் சூப்பர் ஸ்டார்: தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசிய அவர், ஒருமுறை அவரை நான் விமானநிலையத்தில் பார்த்தேன். அவரும் என்னை பார்த்தது போல இருந்ததால், நான் கையை அசைத்தேன். ஆனால், ரஜினி கை அசைக்கவில்லை, சரி அவர் நம்மை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். மறுநாள் காலை எனக்கு போன் வந்தது, நேற்று ஏர்போட்ர்டில் கை அசைத்தீர்கள் பார்த்தேன். ஆனால், அந்த சூழ்நிலையில் என்னால் கையை அசைக்க முடிவில்லை. மன்னிக்கவும் என்றார். அந்த பண்பால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று பாண்டியராஜன் அந்த பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications