எப்போதான் இது முடியும்.. நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்
சென்னை: கொரோனாவால் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமா திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்களும் கொரோனாவுக்கு இரையாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 74.

பாண்டு காலமானார்
இடிச்சப்புளி செல்வராஜின் சகோதரரான நடிகர் பாண்டு 1981ம் ஆண்டு வெளியான கரையெல்லாம் செண்பகப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார். கொரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 74.

ஐசியூவில் மனைவி
சின்னத் தம்பி, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, காதல் கோட்டை, பத்ரி, வில்லன், இப்படை வெல்லும் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவரது மனைவி குமுதாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை
சிறந்த டிசைனரான நடிகர் பாண்டு எம்.ஜி.ஆர் உத்தரவின் பேரில் இரட்டை இலை கட்சி சின்னத்தை வடிவமைத்தவர். ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ள இவர், அனைவரிடத்திலும் நல்ல மரியாதையும் நட்பையும் சம்பாதித்து இருந்தார்.

சோகத்தில் திரையுலகம்
சமீபத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அடுத்ததாக மக்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வந்த நகைச்சுவை நடிகர் பாண்டுவின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் பாண்டுவின் மறைவுக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எப்போதான் இது முடியும்
தினமும் காலையில் எழுந்தவுடனே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியை தினமும் கேட்டு வருவதே மிகப்பெரிய மன உளைச்சலாக மாறி வருகிறது. சமீபத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், நடிகர் பாண்டுவும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











