ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? பார்த்திபனின் வேதனை பதிவு!
சென்னை: ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? என்று நடிகர் பார்த்திபன் உணர்ச்சி வசப்பட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை நின்றுவிட்ட போதும், பால், உணவு போன்ற அடிப்படை தேவைகள் இன்னும் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பல தொண்டு நிறுவனங்கள் தானாக முன் வந்து உதவி செய்து வரும் நிலையில், இயக்குனர் பார்த்திபன் சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பார்த்திபன் வேதனை: மேலும் புயல் பாதிப்பு குறித்து பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் தனது வேதனையை பதிவிட்டுள்ளார். மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன். ஏன் இந்த அவல நிலை?
பல கோடி எதற்கு: விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்? ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே? அடிப்படை தேவைகள், வேலை வாய்ப்புகள், சாலை வசதிகள், மாசற்ற காற்று, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் இடரற்ற சக்தி, ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க செலுத்தும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு!
ஃபேஷன் ஷோ எதுக்கு? ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது. சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்குச் செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும், அதில் பொங்க அரிசியும் சேர்க்காது.
நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல.பொருளாதாரம் சார்ந்த அரசியலை. அதைச் சீர் செய்யத் தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்! இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம். இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!
இனியொரு விதி செய்வோம்: தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ, ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல. சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற இனியொரு விதி செய்வோம் என பார்த்திபன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











