“ஏய்! என் தலைக்கேறுற மாயாவி”.. சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள்.. கவிதையால் வாழ்த்திய பார்த்திபன்!
சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 38வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அந்த இசை அரசனை வாழ்த்தி வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் கவிதையால் சந்தோஷ் நாராயணனை வாழ்த்தி உள்ளார்.

சந்தோஷ் நாராயணன் பிறந்தநாள்
1983ம் ஆண்டு மே 15ம் தேதி திருச்சியில் பிறந்தவர் சந்தோஷ் நாராயணன். இயக்குநராக பா. ரஞ்சித் அறிமுகமான அட்டக்கத்தி படத்தின் மூலம் இவரும் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிட்ஸா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் என தொடர்ந்து ஏகப்பட்ட ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார்.

மாய இசை
இறுதிச்சுற்று படத்தில் மாயவிசை பாடலை போட்டு பலரையும் மயக்கிய சந்தோஷ் நாராயணன் எளிய மக்களுக்கு புரியும் படியான வரிகளை போட்டு எளிய மக்களின் வாழ்க்கையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் மாய இசையை பயன்படுத்தி ரசிகர்களை வடசென்னை, ஜிப்ஸி, கர்ணன் என கட்டிப் போட்டு வருகிறார்.

பிரபலங்கள் வாழ்த்து
என்ஜாயி என்சாமி பாடலை தயாரித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்த சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் #HBDSanthoshNarayanan என்ற ஹாஷ்டேக்கை போட்டு வாழ்த்தி வருகின்றனர். ரிப்பீட் மோடில் சநாவின் பாடல்களை போட்டுக் கேட்டு இந்த லாக்டவுனை அவரது ரசிகர்கள் கடத்தி வருகின்றனர்.

பிறந்தநாள் டிபி
சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள் காமன் டிபியை நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ளார். இசைக் கருவிகளுடன் பிரம்மாண்ட சநாவுக்குள் ஏகப்பட்ட குட்டி சநாக்கள் இருக்கும் விதமாக அற்புதமாக உருவாக்கப்பட்ட அந்த காமன் டிபியை வெளியிடுவதில் மகிழ்ச்சி என பார்த்திபன் கவிதை போட்டு அவரை வாழ்த்தி உள்ளார்.

கவிதையால் வாழ்த்திய பார்த்திபன்
"பார்த்தல் பேசுதல் அனைத்தல் சுவைத்தல்- நீக்கியும் நினைத்தல் நீடித்தல் காதல்! நண்பர் சந்தோஷ் நாராயணன் நட்பு காதலுக்கே உரிய ஊடலுக்குரியது. "ஏய்! என் தலைக்கேறுற" மாயாவி' பாடல் என் ஆவிக்குள்ளும் புகுந்து கபடி ஆடுகிறது. இன்றும். பிறந்த நாள் D P-ஐ வெளியிடுவதில் பெருமை!" நடிகர் பார்த்திபன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ஜகமே தந்திரம் வருது
நேற்று கர்ணன் அமேசான் பிரைமில் வெளியான நிலையில், மீண்டும் தனுஷ் மற்றும் சநா கூட்டணியில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படம் வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீசாகிறது. ஏற்கனவே ரகிட ரகிட ரகிட போட்டும், புஜ்ஜி பாட்டுக்கு கொஞ்சியும் ஆடிய ரசிகர்கள் மொத்த இசையையும் ரசிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











