'திமுக'விலிருந்து 'அதிமுக'வுக்கு மாறியவன் நான்... பார்த்திபன் பரபர பேச்சு!
சென்னை: நான் திமுக அல்ல, திரைப்பட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன். பின்னர் அதிலிருந்து அனைத்திந்திய திரைப்பட முன்னேற்றக் கழகத்திற்கு மாறியவன் என்று தனது ஸ்டைலில் தமிழக அரசுக்கு குட்டு வைத்துப் பேசியுள்ளார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட திரைப்பட நூற்றாண்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜாவை அழைக்கவில்லை என்பதை தனது பாணியில் சுட்டிக் காட்டி அரசு செய்தது தவறு என்று நேற்று நடந்த பட விழா ஒன்றில் உணர்த்திப் பேசினார் பார்த்திபன்.
இத்தனைக்கும் இதே பாரதிராஜாதான், தனது படம் ஒன்றில் பார்த்திபனை நடிக்க அழைத்து பின்னர் தடாலடியாக தூக்கி வீசியவர். இருப்பினும் பழையதை மனதில் கொள்ளாமல் பாரதிராஜாவை நேற்று ஆதரித்தும், உயர்த்தியும் பேசினார் பார்த்திபன்.
பார்த்திபன் பேச்சிலிருந்து சில பகுதிகள்

பித்துப் பிடித்தவர் பாரதிராஜா
பாரதிராஜா,சினிமா மீது பித்துப்பிடித்த கலைஞன். என்னைப்போன்ற நூறு இயக்குனர்களையும், பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார். இயக்குனர்களின் மலை.

விஜயகாந்த்- கார்த்திக் - வடிவேலு
விஜயகாந்த், கார்த்திக், வடிவேல், பார்த்திபன் ஆகியோரை சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைக்க வேண்டாம் என்று கூறப்பட்டதாக பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். விஜயகாந்த், கார்த்திக் இருவரும் அரசியலில் இருக்கிறார்கள். வடிவேல் ஒரு கட்சிக்காக பிரசாரம் செய்தார்.

நான் திரைப்பட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன்
நான் தி.மு.க.வை சேர்ந்தவன் அல்ல. திரைப்பட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன். அதில் இருந்து அனைத்திந்திய திரைப்பட முன்னேற்ற கழகத்துக்கு மாறியவன்.

அம்மா உணவகத்தில் சாப்பிட்டேனே..
முதல்வர் ஜெயலலிதா, அம்மா உணவகம் தொடங்கியதும், நான் நேரடியாக சென்று அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, இது ஏழைகளின் இன்னொரு சத்துணவு திட்டம்" என்று பாராட்டியவன். இது தொடர்பாக முதல்வருக்கு பாராட்டு கடிதமும் எழுதி அனுப்பினேன் என்றார் பார்த்திபன்.


Click it and Unblock the Notifications











