ஆயிரத்தில் ஒருவன் பாகம்- 2 ..சோழ மன்னனாக தனுஷ் நடிக்கிறார்..பார்த்திபன் பகிர்வு
சென்னை : நடிகர் கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது ஆயிரத்தில் ஒருவன்.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியான நிலையில், தற்போது இந்தப் படம் குறித்து பார்த்திபன் அப்டேட் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் படம்
நடிகர் கார்த்திக், ரீமா சென், ஆன்ட்ரியா, பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியானது ஆயிரத்தில் ஒருவன். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை செல்வராகவன் மேற்கொண்டிருந்தார். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

சிறப்பான கதைக்களம்
தொல்பொருள் ஆய்வாளரும் ஆன்ட்ரியாவின் தந்தையுமான பிரதாப் போத்தனை தேடி செல்லும் குழுவில் ஆன்ட்ரியா, ரீமா சென் மற்றும் மூட்டை தூக்கும் தொழிலாளியான கார்த்தி ஆகியோர் இடம்பெறுகின்றனர். இவர்கள் சோழர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதை அடைகின்றனர். பிரதாப் போத்தனையும் காண்கின்றனர்.

கொண்டாட தவறிய ரசிகர்கள்
பாண்டிய அரசக் குடும்பத்தின் எச்சமான ரீமா சென், சோழர்களை அழிக்கும்வகையில் காய் நகர்த்துவதாக கதைக்களம் காணப்பட்டது. மிகவும் பிரம்மாண்டமான இந்தக் கதையை ரசிகர்கள் கொண்டாட தவறிவிட்டனர். ஆனாலும் இதுவரை இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களுடன் உள்ளது.

2வது பாகத்திற்கான எதிர்பார்ப்பு
இந்தப் படத்தின் பிரம்மாண்டம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் சூட்டிங்கிற்கான அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தார்.

பார்த்திபன் கேரக்டரில் தனுஷ்
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷனின்போது பேசியுள்ள நடிகர் பார்த்திபன், விரைவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் படத்தில் சோழ மன்னனாக தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சோழ வாரிசாக தனுஷ்
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னனாக பார்த்திபன் நடித்திருப்பார். படத்தில் செல்வவளம் குன்றி, பண்பாட்டுக் கூறுகளை முற்றிலும் இழந்தவர்களாக சோழர்கள் காட்டப்படுவார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் இறப்பதாக காட்டப்படும் நிலையில், ஒரு குழந்தையை கார்த்தி தூக்கி செல்வார். அந்தக் குழந்தைதான் பிற்கால சோழன். தற்போது அந்தக் குழந்தையின் கதாபாத்திரத்தில்தான் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் வருத்தம்
தற்போது பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தின் பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறைவில்லாமல் வெளியானது ஆயிரத்தில் ஒருவன். ஆனால் ரசிகர்களை இந்தப் படம் சரியாக சென்றடையவில்லை. தற்போது பொன்னியின் செல்வன் படம் வெளியாகியுள்ள நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாட தவறிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











