இன்று உலக செவிலியர் தினம்.. ட்விட்டரில் வாழ்த்து கூறிய பார்த்திபன்!
சென்னை : உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து கூறி உள்ளார்.
நமக்கு பிடித்தமான நபர்கள் பலர் இருந்தாலும் அதில் வித்தியாசமான நபர்கள் தான் நம் மனதில் தனி இடம் பிடித்திருப்பார்கள். எந்த துறையாக இருந்தாலும் சரி அதில் வித்யாசமானவர்களே அதிக நாள் அத்துறையில் பணியாற்றுவார்கள் மற்றும் பலராலும் பாராட்டப்படுவார்கள். தமிழ் சினிமாவில் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பார்த்திபன் என்கிற கலைஞன்.

அவரின் வித்யாசமான கற்பனைக்கும் கதைகளுக்கும் எல்லைகளே இல்லை. ஆரம்ப காலங்களில் பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் அவருடன் இணைந்து சுமார் 20 படங்களில் பணிபுரிந்தார். இவர் நடித்த அழகி, வெற்றி கொடி கட்டு, நீ வருவாயென, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் மக்களிடையில் அவரை ஒரு திறமையான நடிகனாக கொண்டு சேர்த்தது.

சமீபத்தில் வெளியான இவரின் ஒத்த செருப்பு திரைப்படம் தமிழ் சினிமாவை தாண்டி உலகெங்கிலும் பேசப்பட்டது. அட்டகாசமான நடிப்பு, குசும்பு கலந்த வசனம், இசை போன்றவை அந்த படத்திற்கு மேலும் உயிர் கொடுத்தது. வழக்கமாக பார்த்திபன் அவர்கள் சமூக வலைதளங்களில் அழகாய் எழுதி பல பதிவுகளை போடுவார். அந்த வகையில் இன்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: உலக செவிலியர் தின வாழ்த்துக்கள் இந்த மாதம் 10ஆம் தேதி அன்னையர் தினம் , 12ஆம் தேதி செவிலியர் தினம், இடையில் ஒரே ஒரு நாள் தான். ஒரு சிறு வித்தியாசம் தான் தாய்க்கும் செவிலியர்களுக்கு நடுவில் என்று கூறினார். இன்னும் சொல்லப்போனால் பல குழந்தைகளை ஈன்றெடுக்க செவிலியர்கள்தான் முக்கிய காரணம். இன்று பல நபர்கள் நான் நர்ஸ்களிடம் தான் வளர்ந்தேன் என்றும் சொல்வதுண்டு.

ஒரு மேடையில் என்னை பாராட்டிய பெரியவர் ஒருவர் இவருக்கு ஒன்று அல்ல ஐம்பது டாக்டர் பட்டங்கள் வழங்கலாம் என்றார், நான் சொன்னேன் எனக்கு அதுக்கு பதிலாக 25 நர்ஸ்களும் 25 டாக்டர்களும் கொடுங்கள் என்றேன். அந்த அளவிற்கு நமக்கு உதவியாக இருப்பவர்கள் செவிலியர்கள் அதுவும் இந்த கொரோனா நேரத்தில் நமக்கு மிகவும் உதவியாக இருப்பவர்கள் நர்ஸ்கள்தான். இப்படிப்பட்ட தியாகங்களை செய்யும் செவிலியர்களை மனப்பூர்வமாக பாராட்டுவோம் என்று தன் வீடியோவை முடித்தார். இந்த வீடியோவிலும் இவரின் அழகான பேச்சிற்கே பஞ்சமில்லை!


Click it and Unblock the Notifications