Pawan Passes Away: அதிர்ச்சி.. வெறும் 25 வயது தான் ஆகுது.. இளம் நடிகர் திடீர் மரணம்.. பெரும் சோகம்
மும்பை: இளம் நடிகர் பவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சினிமா உலகில் தொடர்ந்து இளம் நடிகர்கள் மாரடைப்பால் மரணமடைவது தொடர்கதையாகவே மாறிவிட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தி மற்றும் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகர் பவன் 25 வயதிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்களையும் திரையுலகத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.

மும்பையில் வசித்து வந்த நடிகர் பவன் நேற்று அதிகாலை 5 மணிக்கு மாரடைப்பு காரணமாக தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ள நிலையில், இன்று அவரது சொந்த ஊரான கர்நாடகாவுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன.
25 வயது இளம் நடிகர் மரணம்: சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகர் பவன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என பலரும் ஜிம்மே கதியென கிடக்கும் நிலையில், அதிக வெயிட்டுகளை தூக்கி உடற்பயிற்சி செய்கின்றனர். மேலும், இரவு நேர பார்ட்டிகள் என தூக்கத்தையும் சிறு வயதிலேயே தொலைத்து விட்டு உடலை வாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எவ்வளவு எச்சரிக்கை விடுத்தும் திரையுலகில் தொடர்ந்து இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டு பெரும் சோதனையை ஏற்படுத்தி வருகிறது. 25 வயதே ஆன சின்னத்திரை நடிகர் பவனின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரபுரா கிராமத்தைச் சேர்ந்த நாகராஜு மற்றும் சரஸ்வதி தம்பதியினரின் மகனான பவன் சினிமா ஆசை காரணமாக பாலிவுட்டில் சாதிக்க கிளம்பினார். இந்தி திரையுலகில் டிவி தொடர்களில் நடித்து வரும் பவனின் சில சீரியல்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெற்றோர்களை பிரிந்து மும்பையில் தனியாக வசித்து வந்த பவன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குடும்பத்தினரையும் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிரஞ்சீவி சர்ஜா உள்ளிட்ட பலர் மாரடைப்பு காரணமாக இளம் வயதிலேயே உயரிழந்த நிலையில், தொடர்ந்து பல மரணங்கள் இதே போல நடந்து வருவதால், உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











