வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்.. மணப்பாறை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகர்!
திருச்சி: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் பெற்ற, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சி கிராமம், பொம்மம்பட்டியை சேர்ந்தவர் பாலகுரு மகன் பி.பாண்டி. இவர் மணப்பாறை நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக, துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், காசோலை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளாக வழக்கு செலவுத்தொகை எதுவுமே கொடுக்கவில்லை என்றும், இதுதொடர்பாக சீனிவாசனிடம் போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மணப்பாறை காவல்நிலையத்தில் வழக்குரைஞர் பாண்டி கடந்த மே மாதம் புகார் அளித்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நீதிமன்ற உத்தரவின்பேரில் திங்கள்கிழமை மாலை மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மேலும் இரண்டு நாள் கையெழுத்திடவும் உத்தரவு இருப்பதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











