உயர் ரத்த அழுத்தம்.. நடிகர் ’பவர் ஸ்டார்’ சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ரசிகர்கள் சோகம்
சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லத்திகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடி என்ட்ரி கொடுத்த சீனிவாசன். தனக்குத் தானே பவர் ஸ்டார் என்கிற பட்டத்தை கொடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே தான் போட்டி என பல பேட்டிகளை கொடுத்து பரபரப்பை கிளப்பினார்.

ரஜினிக்கு போட்டி
நடிகர் ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று ஏகப்பட்ட பில்டப்புகளுடன் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு, சும்மா நச்சுனு இருக்கு, ஆர்யா சூர்யா, யா யா, தலைவன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஷங்கரின் 'ஐ', வாலிப ராஜா என வரிசை கட்டி பல படங்களில் நடித்து வந்தார்.

சந்தானத்துடன் நட்பு
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகராக பவர் ஸ்டார் சீனிவாசனை அறிமுகப்படுத்திய நடிகர் சந்தானம், தொடர்ந்து தனது பல படங்களில் நடிக்க வைத்து, ரசிகர்கள் மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு என்று ஒரு தனி இடத்தையும் பெற்றுத் தந்தார்.

மோசடி வழக்குகள்
சினிமா, அரசியல் என டக்கு டக்குன்னு அடுத்த அடுத்த லெவலுக்கு பறந்து கொண்டிருந்த பவர் ஸ்டார் சீனிவாசன், திரைப் படங்களுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கொஞ்ச காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த அவர், மீண்டும் நான் திரும்ப வந்துட்டேன் என சொல்லும் அளவுக்கு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் சினிமாவில்
இயக்குநர் ஆர்.எஸ். மணி இயக்கத்தில், ஹீரோவாக மீண்டும் கலக்க உள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்த படத்திற்கு 'முருங்கக்காய்' என்ற விவகாரமான டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அப்படியே அடல்ட் படம் போல இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சீக்கிரம் குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











