Prabhas: பிரபாஸ் -சமந்தா ஜோடி சேராததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: முன்னதாக படங்களில் நடித்துள்ள போதிலும் பாலிவுட், டோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு பிரபாஸை சொந்தக்காரர் ஆக்கியது பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் மட்டுமே. இந்தப் படங்களை தொடர்ந்து பிரபாஸ், ஆயிரம் கோடி கிளப் நாயகனாக அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD படமும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் பிரபாஸ். இவருக்கு டோலிவுட்டில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்று மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

நடிகர் பிரபாஸ்: நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார். அவரது அடுத்தடுத்த படங்கள் 1000 கோடி கிளப்பில் இணைந்து வருகின்றன. ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில்தான் இவரது சிறப்பான பயணம் துவங்கியது. தொடர்ந்து பாகுபலி 2 என இரண்டு படங்களிலும் மாஸ் காட்டிய பிரபாஸ், சர்வதேச அளவில் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டுள்ளார். பிரபாஸுடன் தமன்னா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல நடிகைகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் பிரபாஸுடன் அடுத்தடுத்த படங்களில் இணையவும் அவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
பிரபாஸ் -சமந்தா ஜோடி: இதனிடையே தென்னிந்திய அளவிலும் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தாவுடன் நடிகர் பிரபாஸ் ஜோடி சேராமல் உள்ளார். இந்த ஜோடி இணையவேண்டும் என்று பல கட்டங்களில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் படங்களில் இணைய முடியாதபடி சிக்கல் ஒன்று காணப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக சாஹோ படத்தில் நடிகை சமந்தாதான் ஹீரோயினதாக கமிட்டாகியிருந்தார் என்றும் இந்த பிரச்சினையால்தான் சமந்தாவிற்கு பதிலாக படத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்தார் என்பது தெரிந்தவிஷயம்தான்.
ஜோடி சேர்வதில் பிரச்சினை: நடிகர் பிரபாஸ் ஆஜானுபாகுவான உடல் கட்டை கொண்டவர். இவரது உயரம் 6.2ஆக உள்ள நிலையில், நடிகை சமந்தா 5.2 அடி உயரமே உள்ளார். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடித்தால் இவர்களின் உயர வித்தியாசம் படத்தில் வெளிப்படையாக தெரியும் என்பதால் இந்த ஜோடியை இணைப்பதில் சிக்கல் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த ஜோடி சினிமாவில் இணையும் என்று அவர்கள் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தி ராஜாசாப் படம்: கல்கி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் தி ராஜாசாப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஹாரர் ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகிவரும் தி ராஜாசாப் படத்தில் பிரபாசுடன் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதேபோல சமந்தா நடிப்பிலும் அடுத்ததாக சிட்டாடல் வெப் தொடர் ரிலீசாகவுள்ளது. அடுத்தடுத்த படங்களில் அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











