Vijayakanth - அய்யோ அவரை மாதிரிலாம் ஒரு நல்லவர் இருக்க முடியுமா?.. விஜயகாந்த் பற்றி பிரபுதேவா நெகிழ்ச்சி
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. தற்போது தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல் அநேகமாக அங்கேயே புதைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர். ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு போட்டியாக சினிமாவில் விறுவிறுவென்று முன்னேறியவர் அவர். முக்கியமாக அவரது சாமானிய தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்ததால் ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஹீரோ என்ற பெயர் எடுத்தார்.

ஸ்தம்பித்த அரசியல் தலைவர்கள்: 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த் ஆரம்பத்தில் வில்லனாகவே அறிமுகமானவர். அதன் பிறகு முட்டி மோதி ஹீரோ வாய்ப்பை பெற்றுவிட்டார். படத்துக்கு படம் அவருடைய செல்வாக்கு மக்களிடையே ஏறிக்கொண்டே இருந்தது. இதனையடுத்து தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்தார் விஜயகாந்த். அவர் கட்சி ஆரம்பித்தபோது வந்திருந்த கூட்டத்தை பார்த்த பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள்.
எதிர்க்கட்சி தலைவர்: கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார். அதனையடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அந்தக் கூட்டணி தொடரவில்லை. அதற்கு பிறகு விஜயகாந்த்தின் செல்வாக்கு அரசியல் தளத்தில் சரிய தொடங்கியது. இந்த சமயத்தில் உடல்நலக்குறைவும் ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.
நுரையீரல் அழற்சி: அங்கிருந்து வந்து கடந்த சில வருடங்களாகவே வீட்டில் ஓய்வில் இருந்தார். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவழியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி தேமுதிக பொதுக்குழுவிலும் கலந்துகொண்டார். ஆனால் தற்போது அவருக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பிரபுதேவா நெகிழ்ச்சி: அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியிருக்கும் சூழலில் பிரபுதேவா விஜயகாந்த் பற்றி பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், "விஜயகாந்த்தை போல் ஒரு ஹீரோவை நான் பார்த்ததே இல்லை. அவர் ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். அவர் போல் ஒருவர் இருக்கிறார் என்றால் யாருமே நம்பமாட்டார்கள். படங்களில் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் அவரை அனைவருமே விரும்புவார்கள். முக்கியமாக அவரை போன்ற மனிதர் சினிமாவில் இருக்கவே முடியாது. விஜயகாந்த் போன்று ஒரு நல்ல மனிதர் இருக்க முடியுமா என கேள்வி கேட்கும் அளவுக்கு அவர் நல்லவர்" என்றார்.


Click it and Unblock the Notifications











