பொங்கல் ரேஸில் இணைந்த பிரபுதேவாவின் திரைப்படம்!
சென்னை : தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து கதாநாயகனாக நடித்துவரும் பிரபுதேவாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தேள்
மதுரை சம்பவம், தூத்துக்குடி, திருத்தம்,போடிநாயக்கனூர் கணேசன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த இயக்குனர் ஹரி குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது
கடந்த டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தேள் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்புக் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது

பல அவதாரங்கள்
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்து இந்திய ரசிகர்களின் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் பிரபுதேவா. தமிழில் போக்கிரி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து வில்லு என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுதேவாவுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராததால் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார்.

நேரடியாக ஓடிடியில்
பாலிவுட்டின் வசூல் மன்னனாக உள்ள சல்மான்கானுடன் கூட்டணி அமைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். அந்த வகையில் பிரபுதேவா, சல்மான்கான் கூட்டணியில் கடைசியாக வெளியான ராதே திரைப்படம் வேறு வழி இல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. பெரும் பட்ஜெட்டில் உருவான ராதே கலவையான விமர்சனங்களை பெற்றதால் இனி இயக்கத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரபுதேவா முடிவு எடுத்துள்ளார்

தேள்
இந்த நிலையில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வரும் பிரபுதேவா முக்கியமாக தமிழில் அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரபுதேவாவின் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் தேள்.
இயக்குனரும் நடிகருமான ஹரிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். தூத்துக்குடி,திருத்தம்,மதுரை சம்பவம், போடிநாயக்கனூர் கணேசன் உள்ளிட்ட படங்களில் ஹரிகுமார் ஹீரோவாக நடித்துள்ளார். நடிப்பைப்போலவே இயக்கத்திலும் கவனம் செலுத்தி முதல் முறையாக பிரபுதேவா உடன் கூட்டணி அமைத்து தேள் என்ற படத்தை ஹரிகுமார் இயக்கியுள்ளார். இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். சத்யா சி இசை அமைத்துள்ளார்.
Recommended Video

பொங்கலுக்கு ரிலீஸ்
பிரபுதேவா ரவுடியாக நடித்துள்ள இந்த படத்திற்காக உடம்பை தாறுமாறாக ஏற்றி நடித்துள்ளார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அனைத்து கட்ட பணிகள் முடிந்து டிசம்பர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சில சூழ்நிலைகள் காரணமாக ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த படக்குழு இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 14ம் தேதி தேள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











