நடிகர் பிரகாஷ் ராஜின் தாய் உயிரிழந்தார்.. பவன் கல்யாண் இரங்கல்
சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் திருமதி சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து, பிரகாஷ் ராஜூக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
பெங்களூரில் பிறந்தவரான பிரகாஷ்ராஜ் கன்னட தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். அப்போது தான் இயக்குநர் கே.பாலசந்தர் பிரகாஷ்ராஜை தன்னுடைய 'டூயட்' படத்தின் நடிக்க வைத்து தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக் கொண்டார் பிரகாஷ்ராஜ்.
நடிகர் பிரகாஷ் ராஜ்: பிரகாஷ் ராஜின் நடிப்பை கொண்டாட எத்தனையே திரைப்படங்கள் இருந்தாலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'இருவர்' படத்தில் கலைஞர் மு.கருணாநிதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் கதாபாத்திரத்தில் நயம்பட நடித்து பெயர் எடுத்தார். 'இருவர்' படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

தாய் உயிரிழந்தார்: பல மொழிகளில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜின் தாயார், திருமதி சுவர்ணலதா ராய் நேற்றிரவு ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 86. பிரகாஷ் ராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. பிரகாஷ் ராஜின் தாய் சுவர்ணலதா பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததை பிரகாஷ் ராஜ் பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார்.
நாளை இறுதிச்சடங்கு: ஒருமுறை, தனது தாயாருக்கு மூளையில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் பிரகாஷ் ராஜ் பகிர்ந்துகொண்டார். அந்த அறுவை சிகிச்சையின் விளைவாக, அவர் கடுமையான ஞாபக மறதிக்கு ஆளானார். இதனால், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வீட்டில் அவரின் உயிர் பிரிந்தது. அவரின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை நாளை மார்ச் 31-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
பவன் கல்யாண் இரங்கல்: இந்த செய்தியை கேள்விப்பட்ட ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களின் தாயார் திருமதி சுவர்ணலதா அவர்கள் காலமானார் என்பதை அறிந்து நான் மிகுந்த துயரமடைந்தேன். அன்னாரின் ஆன்மா சாந்தியை அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தாயாரின் இழப்பால் துயரத்தில் இருக்கும்பிரகாஷ் ராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











