தி டெவில் இஸ் பேக்.. ஆபரேஷன் சக்ஸஸ்.. கையில் கட்டுடன் போட்டோ போட்ட பிரகாஷ் ராஜ்.. பதறும் ஃபேன்ஸ்!
சென்னை: தனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ரஜ் போட்டோவை ஷேர் செய்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் பிரகாஷ் ராஜ் சினிமாத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோலொச்சி வருகிறார். நடிகராக மட்டுமின்றி, இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நுற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், இந்தி மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என எந்த கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரள விட்டு வருகிறார்.

5 முறை தேசிய விருது
மேலும் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். 5 முறை தேசிய விருதுகள் வென்றுள்ள பிரகாஷ் ராஜ், 6 முறை நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் விருதுகளை 8 முறையும், தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளை 5 முறையும் பெற்றுள்ளார். மேலும் SIIMA, CineMAA மற்றும் விஜய் விருதுகளையும் குவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

விவாகரத்து - இரண்டாவது திருமணம்
பிரகாஷ் ராஜ் 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள் மற்றும் சித்து என்ற ஒரு மகனும் இருந்தனர். மகன் சித்து கடந்த 2004ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு நடன இயக்குநரான போனி வர்மாவை பிரகாஷ் ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

வீட்டில் சறுக்கி விழுந்து விபத்து
56 வயதான நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போதும் சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டில் இருக்கும்போது சறுக்கி விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பிரகாஷ் ராஜுக்கு, இடது கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

கையில் கட்டுடன் செல்பி
இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக நேற்று விமானத்தில் ஹைதராபாத் சென்றார் பிரகாஷ் ராஜ். இந்த நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கையில் கட்டுடன் செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
தி டெவில் இஸ் பேக்
மேலும் தி டெவில் இஸ் பேக்.. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. நன்றி டியர் ஃபிரண்ட் டாக்டர் குருவாரெட்டி உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி... விரைவில் ஆக்ஷனுக்கு திரும்பி விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் நீங்கள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
அபரிமிதமான ஆற்றல் கொண்டவர்
ரசிகர்களும் பிரகாஷ் ராஜ் விரைவில் குணமடைய வேண்டும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் பிரகாஷ் ராஜ் அண்ணா போன்று ஒரு டெவில் இருந்தால் அவர் எப்போதும் வரவேற்கப்படுவார். நகைச்சுவைகளுக்கு அப்பாற்பட்டு.. ஆனால் நீங்கள் அபரிமிதமான ஆற்றல் கொண்டவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எனக்கு இப்படி ஏதாவது நடந்தால், நான் உங்களை போல் சிரிக்க முடியாது. லவ் யூ சார் விரைவில் குணமடையுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











