Prithviraj: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரித்விராஜ்.. மீண்டு வருவேன் என உறுதி!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் பலத்த காயம் ஏற்பட்டது.
கொச்சியில் நடைபெற்ற விளாயத் புத்தா என்ற படத்தின் சூட்டிங்கின்போது பிரித்விராஜிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொச்சியில் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரித்விராஜ்: நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களிலும் இந்தியிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், இயக்குநர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். கடந்த 2002ம் ஆண்டில் வெளியான நந்தனம் என்ற படம் மூலம் இவர் மலையாளத்தில் அறிமுகமானார்.

தமிழில் பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், உருமி, ராவணன் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ், இயக்குநராகவும் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தினார். இயக்குநராக இவரது முதல் படமே மலையாள சூப்பஸ்டார் மோகன்லாலுடன் அமைந்தது. இவர்களது காம்பினேஷனில் வெளியான லூசிஃபர் படம் மிகப்பெரிய அதிர்வலைகளை மலையாள திரையுலகில் ஏற்பட்டது. தமிழிலும் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது பிரித்விராஜ் விளாயத் புத்தா என்ற படத்தில் நடித்து வந்தார். சந்தனக் கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் கொச்சியில் உள்ள மறையூரில் கடந்த சில தினங்களுக்கு நடைபெற்றது. இதில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது பிரித்விராஜிற்கு விபத்து ஏற்பட்டு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுதது சில தினங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார். அவர் இரண்டு மாத காலங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு மாத காலங்களை தான் ஆக்கப்பூர்வமாக செலவழிப்பேன் என்று பிரித்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் முழுமையாக குணமடையவும் விரைவில் செயலில் இறங்கவும் தேவையான அனைத்தையும் தான் செய்வேன் என்றும் வலியுடன் போராடி மீண்டு வருவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த நேரத்தில் தன் மீது அன்பையும் அக்கறையையும் செலுத்திய அனைவருக்கும் நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதனிடையே, பிரித்விராஜ் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











