படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. நட்சத்திர ஓட்டலில் தனிமை!
கொச்சி: படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன.
இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. சமீப காலமாக, இதன் தாக்கம் குறைய தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

குணமடைவோர்
கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,97,064 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,15,197 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்
இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜுன், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, தமன்னா, இயக்குனர் ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், விஷால் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.

பிருத்வி ராஜ்
இந்நிலையில், பிரபல மலையாள ஹீரோ பிருத்வி ராஜூக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர், தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர். இப்போது ஜனகனமன என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

அவருக்கு காய்ச்சல்
இதன் படப்பிடிப்பில், கடந்த 7 ஆம் தேதியில் இருந்து நடித்து வரும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கு பாசிட்டிவ் என்று தெரிய வந்ததை அடுத்து, படப்பிடிப்புக்காக எடப்பள்ளியில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நன்றாக இருக்கிறேன்
தான் இப்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்கும் டிஜோ ஜோஸ் அந்தோணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அவர் கூறும்போது, நான் கொரோனா பரிசோதனை செய்யவில்லை. நான் நன்றாக இருக்கிறேன் என்றார். இன்னும் 2 நாள் படப்பிடிப்பு இருக்கிறது. இதை முடித்துவிட்டு மொத்த டீமும் தனிமைப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜோர்டான் சென்றார்
நடிகர் பிருத்விராஜ் கொரோனாவுக்கு முன் ஆடுஜீவிதம் படத்துக்காக, ஜோர்டான் சென்றார். லாக்டாவுன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கு சிக்கிக்கொண்ட அவர், மே மாதம் கேரளா திரும்பினார். அப்போது 14 நாள் தனிமைப் படுத்தப்பட்டார். இப்போது கொரோனா காரணமாக மீண்டும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











