என்ன பிரச்சினைன்னு தெரியாம மைக்கை தூக்கிட்டு வராதீங்க.. குக் வித் கோமாளி விவகாரத்தில் புகழ் காட்டம்!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் க்ளைமாக்ஸ் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்காதான் டைட்டில் வின்னர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டுவந்த மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகும் முடிவை வெளியிட்டுள்ளார். கடந்த முதல் சீசனிலிருந்தே இவர் கோமாளியாகவும் ஆங்கராகவும் செயல்பட்டுவந்த நிலையில் தற்போது இந்த முடிவை எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரியங்கா மீது அதிகமான சர்ச்சை கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி: விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து அதிக டிஆர்பிக்களை பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த நிகழ்ச்சி அதிக ஸ்கோர் செய்து வரும் நிலையில், சிறப்பான ஸ்ட்ரெஸ் பஸ்டராக இந்த நிகழ்ச்சி காணப்படுவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4 சீசன்களாக இந்த நிகழ்ச்சியின் கோமாளியாக இருந்துவந்த மணிமேகலை, இந்த சீசனில் ஆங்கராக மாறியுள்ளார்.
வெளியேறிய மணிமேகலை: இந்த நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட பிரியங்கா தன்னை அதிகமாக ஆதிக்கம் செய்ததாகவும் தன்னை ஆங்கராக செயல்பட விடவில்லை என்றும் சுயமரியாதைக்கு பங்கம் வந்த சூழலில் பணம், புகழ் பெரிதில்லை என்று தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட பிரியங்கா எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. மாறாக அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு வெளிநாட்டிற்கு பறந்துவிட்டார்.
நடிகர் புகழ் காட்டம்: இந்நிலையில் இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் துவக்கம் முதலே மணிமேகலையுடன் இணைந்து கோமாளியாக செயல்பட்ட நடிகர் புகழிடம் அவர்களது பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நிகழ்ச்சியை டிவியிலும் சமூக வலைதளங்களிலும் பார்ப்பதாக அவர் கேலியாக பேசியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து இது தனிப்பட்ட முறையில் பிரியங்கா மற்றும் மணிமேகலையின் பிரச்சினை என்றும் அவர்கள்தான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும என்றும் கோபத்துடன் பேசினார்.
சம்பந்தப்பட்டவர்கள் பேசட்டும்: தொடர்ந்து இந்த விஷயத்தில் நடந்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளாமல் கேமராவை தூக்கிக் கொண்டு கருத்துக் கேட்க வேண்டாம் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். இது போன்று ஆயிரம் பேர் கருத்துக்களை சொல்வதாக வீடியோ வெளியிட்டு வருவதாகவும் எது நடந்தது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பேசட்டும் என்றும் புகழ் கூறியுள்ளார். தொடர்ந்து சமீபத்தில் வில்லனாக கோலி சோடாவில் நடித்தது குறித்தும் பேசிய புகழ், அதை ஒரு கேரக்டராகவே தான் அணுகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications