கல்வி தானத்தை தொடர்ந்து..கடைசியாக கண்களையும் தானம் செய்த நடிகர் புனித் ராஜ்குமார்..உருகும் ரசிகர்கள்!
சென்னை: பல மாணவர்கள் படிக்க உதவியாக இருந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறுதியாக தனது கண்களையும் தானம் செய்துள்ளார்.
பிரபல கன்னட நடிகரும் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.
46 வயதே ஆன அவரது மரணம் கன்னட சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவையே உலுக்கியுள்ளது. அவரது மறைவுக்கு ஒட்டு மொத்த இந்திய சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உயிர் பிரிந்தது
இன்று காலை வழக்கம் போல் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார் புனித் ராஜ்குமார். அப்போது திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பகல் அவர் உயிர் பிரிந்தது.

கதறி அழுத ரசிகர்கள்
அவருக்கு நெஞ்சுலி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றதுமே ஏராளமான ரசிகர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். அவர் மரணமடைந்துவிட்டார் என்ற தகவலை அறிந்ததும் ரசிகர்கள் மருத்துவமனை முன்பே கதறி அழுதனர்.

6 மாத குழந்தையாக
6 மாத குழந்தையாக இருக்கும் போதே திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார் புனித். தனது 14 வயதுக்குள்ளேயே 14 படங்களில் நடித்தார். குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் புனித் ராஜ்குமார். ஏராளமான படங்களில் நடித்துள்ள புனித் ராஜ்குமார் 29 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தந்தையை போலவே உதவி
புனித் ராஜ்குமார் அப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டனாது. இதனை தொடர்ந்து ரசிகர்களால் அப்பு என்றே அழைக்கப்பட்டார் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் தனது தந்தையை போலவே சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

கண்கள் தானம்
ஏராளமான மாணவர்களின் கல்விக்கு உதவி வந்துள்ளார் புனித் ராஜ்குமார். உயிருடன் இருக்கும் வரை பல மாணவ மாணவிகளுக்கு கல்வி தானம் வழங்கிய புனித் ராஜ்குமார், தான் இறந்த பிறகு தனது கண்களை தானமாக வழங்கியுள்ளார். தனது தந்தையின் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு புனித்தின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு அரசு மரியாதையுடன்
இதனை அறிந்த ரசிகர்கள் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருந்தார் என்றும் இறந்த பிறகும் ஹீரோவாகவே இருக்கிறார் என்றும் உருக்கமாக கூறி வருகின்றனர். புனித் ராஜ்குமாரின் உடல் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











