பல சர்ச்சைகளுக்கு இடைய நடந்த டப்பிங் யூனியன் தேர்தல்.. மீண்டும் தலைவரான ராதா ரவி!
சென்னை: 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் மற்றும் தலைவரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில், தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கதலைவராக நடிகர் ராதா ரவி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலர் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக நடிகர் ராதா ரவி மீண்டும் போட்டியிட்டார். அதே தலைவர் பதவிக்கு ராஜேந்திரன், சர்குணராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று விருகம்பாக்கத்தில் உள்ள AKR மஹாலில் நடைபெற்றது. இதில், ராதிகா சரத்குமார், நாசர், விஜய் சேதுபதி, போஸ் வெங்கட் என நடிகர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் வாக்களிக்க நடிகர் ராதா ரவி, நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வந்து இருந்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலானது. இதை பார்த்த பலரும் என்ன ஆச்சு? என்ன பிரச்சனை ? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.
சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில், 313 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதா ரவி நடிகர் சங்கத்தின் தலைவராக மீண்டும் வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் மற்றும் சற்குணம் இருவரும் தோல்வி அடைந்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 1017 வாக்குகள் பதிவான நிலையில், ராதா ரவி 662 வாக்குகளும், ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணராஜ் 36 வாக்குகளும் பெற்றனர். இதில் ராதா ரவி 313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


Click it and Unblock the Notifications











