கோத்தகிரி சொகுசு பங்களாவுக்கு சென்ற நடிகர் ராதாரவி.. வீட்டிலேயே தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை!
சென்னை: சென்னையில் இருந்து கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவிவை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.
Recommended Video
நடிகர் ராதாரவி தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ராதாரவி அரசியல் பிரமுகராகவும் உள்ளார். டப்பிங் சங்க தலைவராகவும் உள்ள ராதாரவி அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

கோத்தகிரி பங்களா
கடைசியாக டகால்டி என்ற படத்தில் நடித்தார் நடிகர் ராதாரவி. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்த ராதா ரவி தற்போது பாஜகவில் பேச்சாளராக உள்ளார். சென்னையில் வசித்து வரும் நடிகர் ராதாரவி கடந்த 10ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனது சொகுசு பங்களாவுக்கு சென்றார்.

வீட்டிலேயே தனிமை
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ராதாரவி குடும்பத்துடன் கோத்தகிரிக்கு சென்றுள்ளார். ராதாரவி கோத்தகிரி வந்த தகவலை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை குடும்பத்துடன் அவரது வீட்டிலேயே தனிமைப் படுத்தி உள்ளனர்.

வீட்டின் முன்பு ஸ்டிக்கர்
இதுதொடர்பான ஸ்டிக்கரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ராதாரவியின் வீட்டின் முன்பு ஒட்டியுள்ளனர். தொடர்ந்து நடிகர் ராதா ரவியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர் முறையான அனுமதி பெற்றே சென்றது தெரிய வந்தது.

சளி மாதிரிகள்
தொடர்ந்து ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதற்காக அவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சொகுசு பங்களாவிலேயே ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை முதலிடம்
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் சென்னைதான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நடத்தப்படும் சோதனையாக ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேனியில் பாரதிராஜா
கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான தேனிக்கு சென்ற இயக்குநர் பாரதிராஜா வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அவரது வீட்டின் முன்பும் ஸ்ட்டிக்கர் ஒட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











