Raghava lawrence: டான்.. மார்க் ஆண்டனி.. அடுத்தது எங்க கூட்டணிதான் ஹிட்டு.. லாரன்ஸ் உற்சாகம்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தை தொடர்ந்து 8 ஆண்டுகள் கழித்து தற்போது படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில், இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

எஸ்ஜே சூர்யாவுடன் தன்னுடைய கூட்டணி மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்று லாரன்ஸ் உறுதி: நடிகர்கள் பாபி சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. மேலும் படத்தில் நடித்த பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் தற்போது உருவாகியுள்ளது. வரும் தீபாவளியையொட்டி படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் தற்போது சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்தது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. மாமதுர என்ற அந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன், தன்னுடைய மகள் தீ-யுடன் இணைந்து பாடியுள்ளார். ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ள இந்தப் பாடல் தற்போது யூடியூபில் ட்ரெண்டாகியுள்ளது. வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான வியூஸ்களை இந்தப் பாடல் பெற்றுள்ளது.
இதனிடையே இந்தப் பாடல் வெளியீட்டின் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ், தான் முன்னதாக முதல் பாகத்திலேயே பாபி சிம்ஹா நடித்திருந்த கேரக்டரில் நடிக்கவிருந்ததாகவும் ஆனால் அந்த வாய்ப்பு தன்னைவிட்டு போனதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து படம் ரிலீசானவுடன் தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான முதல் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தாலும் தற்போது 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள 2வது பாகத்தில் நடித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவின் நடிப்பிற்கும் ராகவா லாரன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா நடத்திருந்த டான் படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் சமீபத்தில் விஷாலுடன் நடித்திருந்த மார்க் ஆண்டனி படமும் சூப்பர் ஹிட்டடித்ததை சுட்டிக் காட்டியுள்ள ராகவா லாரன்ஸ், அடுத்ததாக தங்களது காம்பினேஷனில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மிகப்பெரிய வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











