சூப்பர் ஸ்டாரை பார்க்கச் சென்ற லாரன்ஸ்; காரணம் தெரிஞ்சா நீங்களே வாழ்த்துவீங்க!
சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமா நடிகர்கள், தயாரிபாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என திரைத்துறைக் கலைஞர்களே தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதேநேரத்தில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் வளர்ந்தவர்கள் பலர் உண்டு. அதில் ஒருவர்தான் நடிகர் லாரன்ஸ். சினிமாவில் சாதாரண நபராக இருந்த லாரன்ஸை நடன இயக்குநராக உருவாக்கியதில் ரஜினியின் பங்கு மிகப்பெரியது.
ரஜினி ராகவேந்திரா சாமியின் தீவிர பக்தர் என்பதாலே லாரன்ஸும் தீவிர ராகவேந்திரா பக்தராக உள்ளார். நடனக்கலைஞராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய லாரன்ஸ் அதன் பின்னர் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். தனது நடிப்புத் திறமையால் மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்று வளர்ந்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான பாண்டி, முனி போன்ற படங்கள் குடும்பப் பெண்கள் மத்தியில் லாரன்ஸை கொண்டு சென்றது. இதன் காரணமாகவே லாரன்ஸ் படங்களுக்கு இன்றைக்கும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றது எனலாம்.

முனி படத்தின் இரண்டாம் பாகத்தில் திருநங்கை பேயாக நடித்து அனைவரையும் கண்கலங்கச் செய்தார். தமிழ் சினிமாவில் விட்லாச்சாரியாரிக்குப் பிறகு பேய் படங்கள் அதிக அளவில் உருவாக முக்கிய காரணமாக லாரன்ஸ் மாறினார். இதுவரை முனி டைட்டிலில் 4 பாகங்களை எடுத்துள்ள லாரன்ஸ் அடுத்து ஐந்தாவது பாகத்தினை எடுக்க திட்டமிட்டுள்ளார். அதாவது காஞ்சனா படத்தின் 5வது பாகத்தை வரும் செப்டம்பரில் இருந்து படமாக்க முடிவு செய்துள்ளார்.

ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்: இவரது நடிப்பில் வெளியான ஜிகிர்தாண்டா டபுள் எக்ஸ் படத்தில் படம் முழுவதும் வரக்கூடிய கதாபாத்திரமாக நடித்தது மட்டும் இல்லாமல் க்ளைமேக்ஸில் "கோமாரே ஏன்" என கேள்வி கேட்கும்போது அனைவரையும் கண் கலங்க வைத்தார். இந்த படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதால் லாரன்ஸ் உட்பட படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அந்த படத்தில் லாரன்ஸ் ஏற்று நடித்த கதாபாத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து உருவாக்கப்பட்டதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மாற்றம்: பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட ராகவா லாரன்ஸ் கடந்த மே 1ஆம் தேதி மாற்றம் என்ற அறக்கட்டளையை நிறுவி மக்களுக்கு உதவி செய்து வருகின்றார். மேலும் தன்னிடம் உதவி எனக் கேட்கும் நபர்களுக்கு நேரடியாகச் சென்று உதவும் தன்மை கொண்ட நகைச்சுவைக் கலைஞர் பாலாவுடன் இணைந்தும் உதவி செய்து வருகின்றார்.

ரஜினியிடம் ஆசீர்வாதம்: இந்நிலையில் இன்று அதாவது ஜூன் 23ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சென்னை, போயஸ்கார்டனில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். மேலும் தனது மாற்றம் அறக்கட்டளை தொடர்பான விவரங்களைச் சொல்லி ஆசிர்வாதமும் வாங்கியுள்ளார். இதுதொடர்பான தகவலை லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மாற்றம் அறக்கட்டளை தொடங்கப்பட்டபோது ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சந்திரமுகி 2: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. பேய்க்கதையை மைய்யப்படுத்திய திகில் காட்சிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத் கதாநாயகியாக நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வியைத் தழுவியது.


Click it and Unblock the Notifications











