'எல்லாரும் கேட்குறாங்க.. என்னால முடியல'.. முதல்வரை சந்தித்து உதவி கேட்க ராகவா லாரன்ஸ் முடிவு!
பலரும் தொடர்ந்து உதவிகள் கேட்டு தன்னை தொடர்பு கொள்வதால், அரசின் உதவியை நாட உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
நடன இயக்குனராக இருந்து, நடிகராக உயர்ந்து, இன்று இயக்குனராக கலக்கிக்கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். ராகவேந்திரரின் தீவிர பக்தரான லாரன்ஸ், அவர் மீது கொண்ட பற்றால் தனது பெயரை ராகவா லாரன்ஸ் என மாற்றிக்கொண்டார்.

தாய் மீது அதிக பாசம் கொண்ட ராகவா லாரன்ஸ், அவருக்கு கோயில் கட்டி வழிப்பட்டு வருகிறார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்காக பாடுவடுவது என சமூக பணிகளிலும் லாரன்ஸ் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில், " என்னிடம் நிறைய பேர் உதவி கேட்டு வருகிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு நான் அவர்களுக்கு உதவுகிறேன். எந்த பதிவையும் நான் புறக்கணிப்பது இல்லை.
நிறைய பேர் என்னிடம் உதவிக்கேட்டு வரும் போது, தனி மனிதனாக என்னால் அனைத்தையும் செய்ய முடியவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நான் அரசாங்கத்தின் உதவியை நாட முயற்சிக்கிறேன்.
முந்தைய காலங்களில் மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து உதவி கேட்டிருக்கிறேன். அவர்களும் தட்டாமல் நான் கேட்ட உதவிகளை செய்திருக்கிறார்கள்.
தற்போது நிறைய பேர் என்னிடம் உதவி கேட்டு வருவதால் அரசின் உதவியை நாடுவது என முடிவு செய்துள்ளேன். எனவே நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அவர்கள் எனது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். கூடிய விரைவில் உங்கள் வீட்டிற்கு வந்து நேரில் சந்திக்கிறேன்", என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











