Rajesh Death: அப்பாவின் உடலை பார்த்து கதறி அழுத ராஜேஷின் மகள்.. நாளை இறுதிச்சடங்கு!
சென்னை: பழம் பெரும் நடிகரான ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் ராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ராஜேஷின் மகள் கனடாவில் இருப்பதால் அவர் வந்த பிறகே இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் ராஜேஷின் மகள் அப்பாவின் உடலைப்பார்த்து கதறி அழுதார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான ராஜேஷ், 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதி பிறந்தார். 1974 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் 'கன்னிப் பருவத்திலே' படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் ராஜேஷ். அந்த படத்தை தொடர்ந்து அந்த ஏழு நாட்கள், தாய்வீடு, சிறை, சத்யா, ஜெய்ஹிந்த், நேருக்கு நேர், தீனா, ரமணா, விருமாண்டி, தர்மதுரை, சர்க்கார் என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த ஏழு நாட்கள் படத்தில் அவரது நடிப்பு இப்போது வரை நினைவுகூறத்தக்கது.

நடிகர் ராஜேஷ் மறைவு: திரைப்படங்கள் மட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் முதல் பாகத்தில் தீபாவின் தந்தையாக நடித்திருந்தார். ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்த அவருக்கு வியாழக்கிழமை காலை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 75. அவரது உடல், சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவரான திருமாவளவன் மற்றும் நடிகர்கள் பார்த்திபன், டி.ராஜேந்தர், சத்யராஜ், சண்முகப்பாண்டியன் என நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கதறி அழுத மகள்: ராஜேஷின் மகள் திவ்யா கனடாவில் வசித்து வருவதால் அவர் சென்னை வந்ததும் நாளை காலை ஜூன் 1 ஆம் தேதி காலை 11 மணியளவில் மறைந்த ராஜேஷின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடல், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டது. இன்று அதிகாலை ராஜேஷின் மகள் திவ்யா தமிழகம் வந்த நிலையில், அப்பாவின் உடலை பார்த்து கதறி அழுதார். நடிகர் ராஜேஷின் பேத்தி மற்றும் பேரன் என அனைவரும் தாத்தாவை பார்த்து கதறி அழுதனர்.
நாளை இறுதிச்சடங்கு: நடிகர் ராஜேஷ் சொந்தக்கார பெண்ணான ஜோன் சில்வியா 1983ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா தனது 49வது வயதில் மாரடைப்பால் 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். இதில் மகன் தீபக் ராஜேஷ், 'பயணங்கள் தொடர்கின்றன' என்ற ஒரு படத்தில் கதாநாயகனை நடித்திருக்கிறார். ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











