Rajinikanth - தயாரிப்பாளர் சங்க தேர்தல் - வாக்களித்தார் ரஜினிகாந்த்
சென்னை: Rajinikanth(ரஜினிகாந்த்)இன்று நடைபெற்று வரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை செலுத்தினார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தற்போது 'தேனாண்டாள் ஸ்டுடியோஸ்' முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில், தற்போது 2023 - 2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் வரும் 26.3.2023 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்: அதில், மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை ரத்து செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான அதிகாரிகளாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.வெங்கட்ராமன் மற்றும் வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

தொடங்கியது தேர்தல்: பின்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 30ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் மன்னன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலானது, இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறவிருக்கிறது.
வாக்களிக்க வந்த ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று ஆந்திரா சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து, சென்னை அடையாறில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு வந்து நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை செலுத்தினார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
யார் யார் போட்டி: முன்னதாக, இந்தத் தேர்தலில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில், தலைவராக தேனாண்டாள் முரளி, துணைத்தலைவராக லைகா தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் செயலாளர் பதவிக்கு கதிரேசன் மற்றும் ராதாகிருஷ்ணனும், பொருளாள பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இணை செயலாளர் பதவிக்கு சௌந்தரபாண்டியன் போட்டியிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











