நடிகை மீனாவிற்காக கண்கலங்கிய ரஜினிகாந்த்.. எதற்காக தெரியுமா? வீடியோ பகிர்ந்த நாயகி!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மீனா இருவரும் சினிமாவில் சிறப்பான ஜோடியாக கருதப்பட்டவர்கள். எஜமான், முத்து என ஜோடி போட்டு ரசிகர்களை கவர்ந்தவர்கள்.
ரஜினியுடன் தன்னுடைய 17வது வயதிலேயே எஜமான் படத்தில் இணைந்து நடித்துள்ளார் மீனா. தொடர்ந்து முத்து படத்தில் இவர்களது ஜோடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்திலும் நீண்ட காலங்களுக்கு பிறகு ரஜினியை காதலித்த அவரது முறைப்பெண்ணாக நடித்திருந்தார் மீனா.

ரஜினிகாந்த் -மீனா ஜோடி
நடிகர் ரஜினிகாந்த் -மீனா ஜோடி கோலிவுட்டில் மிகவும் பிரபலமானது. எஜமான் படத்தில் துவங்கியது இவர்களது பயணம். வானவராயன் - வைத்தீஸ்வரி கேரக்டர்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. பாதிப்படம் வரையில் தான் இந்தப் படத்தில் வருவார் மீனா. இடையில் பரிதாபமாக இறந்துவிடுவார். ஆனாலும் இந்தக் கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பு அலாதியானது. ரசிகர்களின் அதிகமான கொண்டாட்டத்திற்கு இந்தப் படம் உள்ளானது.

சிறப்பான முத்து படம்
இந்நிலையில் தொடர்ந்து முத்து படத்திலும் இவர்களின் கேரக்டர்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ என்று மலையாளத்தில் ரஜினியை பார்த்து மீனா கேட்கும்போது, ரசிகர்கள் உருகித்தான் போனார்கள். தொடர்ந்து சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்திலும் ரஜினியை காதலித்து திருமணம் செய்ய முடியாமல் போன முறைப்பெண்ணாக தன்னுடைய காதலை காட்டுவார் மீனா. இதில் குஷ்பூவும் இணைந்துக் கொண்டார்.

17 வயதில் ரஜினியுடன் ஜோடி
எஜமான் படத்தில் மீனா நடித்தபோது அவருக்கு வயது 17 தானாம். இதனால் அவரை ஜோடியாக்க ரஜினியும் தயங்கியுள்ளார். ஆனாலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் மீனாவின் சுக துக்கங்கள் அதிகமாக பங்கேற்பவராக ரஜினி உள்ளார். மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தபோது, அவரது இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், மீனாவிற்கு ஆறுதலாக இருந்தார்.

மீனா 40 நிகழ்ச்சி
இதேபோல தற்போது மீனா 40 என்ற நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. மீனா குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் நெஞ்சங்கள் படத்தில்தான் அறிமுகமானார். அவர் திரைத்துறையில் தற்போது 40 ஆண்டுகளை பூர்த்தி செய்ததை பாராட்டும் வகையில் மீனா 40 நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. இதில் தென்னிந்திய அளவில் பல திரைத்துறை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். நேரில் வரமுடியாதவர்கள், வீடியோ மூலமும் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரஜினி
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டது மிகச்சிறப்பாக பார்க்கப்பட்டது. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அவரை ரஜினி அங்கிள் என்றுதான் கூப்பிடுவார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு, மீனாவின் சினிமா பயணத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்தார். சப்பியாக பன் மாதிரி மீனா இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டினார்.

ஏராளமான நடிகர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா, குஷ்பூ, சங்கீதா, சினேகா, ரோஜா, பூர்ணிமா பாக்யராஜ், நடிகர்கள் ஜீவா, பிரபுதேவா, சரத்குமார், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ், கங்கனா ரணாவத், மஞ்சு வாரியர் ஆகியோரும் வீடியோ மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரபுதேவா, ஜீவா, தேவயானி உள்ளிட்டவர்களும் மீனாவை பாராட்டி மேடையில் பேசினர்.

கண்கலங்கிய ரஜினி
இதையடுத்து மேடையில் பேசிய மீனா, இந்த இனிமையான பொழுதில் தான் இருவரை மிஸ் செய்வதாகவும் தன்னுடைய தந்தை மற்றும் கணவரை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் கூறி கண்கலங்கினார். இதை பார்த்தவர்கள் அனைவரையும் கண்கலங்க செய்தார். நடிகர் ரஜினிகாந்த்தும் இதைக் கேட்டு கண்கலங்கினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், யாருடைய கண் பட்டதோ, இதுபோல நடந்து விட்டது என்று கூறி வருத்தம் தெரிவித்தார். இந்த வீடியோவை தற்போது மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











