Jailer 2: ஜெயிலர் 2 படத்திற்கு தயாராகும் ரஜினி.. மீண்டும் களமிறங்கும் நெல்சன்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம்.
இந்தப் படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து போட்டிக்கு படங்கள் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது ஜெயிலர்.
இந்தப் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறது. இந்நிலையில் ரஜினியின் தலைவர் 171 படத்தையும் தயாரிக்கவுள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க தயாராகும் ரஜினி?: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தற்போது மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகளில் அதிரடியாக ஓடி வருகிறது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி, மிர்ணா என நட்சத்திரப் பட்டாளத்தையே இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். மகன் மீதான தந்தையின் பாசம், அவர் இறந்துவிட்டதாக கருதி, அதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் ரிரையர்ட் ஜெயிலர் என எளிமையான கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்டு திரைக்கதையில் அதிரடி காட்டியிருந்தார் நெல்சன்.
முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் என சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த நெல்சன், கடந்த பீஸ்ட் படத்தில் சொதப்பினார். இதையும் சேர்த்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அவர் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது. படம் 600 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டி தொடர்ந்து ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த வெற்றியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சனுக்கும் ஷேர் வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் காசோலை மற்றும் விலையுயர்ந்த காரை பரிசாக கொடுத்துள்ளது. இந்நிலையில் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்களை கடுப்பிற்குள்ளாக்கியுள்ளது. இதனால் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவு குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே அடுத்ததாக தலைவர் 170 படத்திற்காக ஞானவேல் இயக்கத்தில் இணைந்துள்ளார். இதனிடையே ஜெயிலர் 2 படத்திற்கான வேலைகளும் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் -ரஜினி கூட்டணியில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தை தொடர்ந்து இந்தப் படத்திற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தாக தனுஷை வைத்து நெல்சன் படமியக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தனுஷ் அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இயக்கத்திலும் பிசியாக உள்ளார். இதனிடையே, தனுஷ் -நெல்சன் கூட்டணியிலான படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாக அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











