கருணை உள்ளம் கொண்டவர் புரட்சித்தலைவி.. ஜெயலலிதா 75வது பிறந்தநாளில் நடிகர் ரஜினிகாந்த் புகழ்ச்சி!
சென்னை : மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி அவரது கட்சித் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா 75வது பிறந்தநாள்
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்றைய தினம் தமிழகமெங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது தொண்டர்கள் இந்த நாளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாளில் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் வாழ்த்து
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கருணை உள்ளம் கொண்டவர் என்று அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்த 75வது பிறந்தநாளில் அவர் நம்முடன் இல்லையே என்ற வருத்தத்துடன் அவரை நினைவுப்படுத்திக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மற்றொரு பெண்மணியை பார்க்க முடியாது
ஜெயலலிதாவை போல இன்னொரு பெண்மணியை பார்க்க முடியாது என்று கூறியுள்ள ரஜினிகாந்த், அவரது அழகு, கம்பீரம், ஆளுமை, துணிச்சல் யாருக்கும் வராது என்றும் தெரிவித்துள்ளார். எம்ஜிஆருக்கு புரட்சித் தலைவர் என்ற பெயர் வந்தது எதனால் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அனைத்து கட்சியினரும் மதித்தார்கள்
அவரது மறைவிற்கு பிறகு தனி பெண்மணியாக பிளவுப்பட்ட கட்சியை ஒன்றாக்கி மேலும் பலமாக்கி, பெரிய கட்சியாக்கி தமிழகத்தை ஆண்டவர். அதனால்தான் அவர் புரட்சித் தலைவி என்றும் புகழ்ந்துள்ளார். இந்தியாவின் அனைத்து கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவை மதித்தார்கள் அவரை பார்த்து பிரமித்தார்கள் என்றும் ரஜினி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் கருணை உள்ளம்
ஒரு கட்டத்தில் தனக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பை சுட்டிக் காட்டிய ரஜினி, அவருக்கு எதிராக பேச வேண்டிய காலகட்டம் ஏற்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் மறந்து தன்னுடைய பெண் திருமணத்தை நேரில் வந்து நடத்திக் கொடுத்த ஜெயலலிதாவின் பெரிய கருணை உள்ளத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











