பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரஜினியின் வேட்டையன் பட பாடல்.. சமூக வலைதளங்களில் லீக்கானதால் அதிர்ச்சி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ள படம் வேட்டையன். முன்னதாக ஜெய் பீம் என்ற மிகச் சிறப்பான படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.
போலி என்கவுண்டருக்கு எதிரான படமாக வேட்டையன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் ப்ரோமோஷன்களையும் மேற்கொள்ள லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், அமிதாபச்சன் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தில் இந்தக் கூட்டணியுடன் ரித்திகா சிங், மஞ்சுவாரியார், பகத் பாசிலும் நடித்துள்ள நிலையில் படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ்: சூர்யாவின் கங்குவா படமும் அதே நாளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டி பலமாக இருக்குமா அல்லது கங்குவா படம் பின்வாங்குமா என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் வேட்டையன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். முன்னதாக வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் இந்த டயலாக் மிகப் பெரிய அளவில் கவனத்தை பெற்றது.

சமூக வலைதளத்தில் லீக்: இந்நிலையில் மனசிலாயோ பாடலும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தலைவர் நிரந்தரம் பாடலை எழுதிய சூப்பர் சுப்பு, மனசிலாயோ பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையில் முன்னதாக ஜெயிலர் படத்தின் பாடல்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், வேட்டையன் படத்தின் பாடல்களும் ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வேட்டையின் படத்தின் மனசிலாயோ பாடலின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளன.

பிரம்மாண்ட பாடல்: இந்த காட்சிகளில் ரஜினி மாஸாக நடனமாடியுள்ள நிலையில் அவருடன் இணைந்து அனிருத்தும் நடனமாடி உள்ளதை பார்க்க முடிகிறது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதை இந்த காட்சிகள் மூலம் அறிய முடிகிறது. படக்குழுவனிர் வெளியிடும் முன்னதாக இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஜினியின் படங்களில் எப்போதுமே பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரிய அளவில் கவனம் கொடுக்கப்படும். அந்த வகையில் வேட்டையன் படத்தின் பாடல்களும் பிஜிஎம்மும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications