சிறப்பு விருது அறிவித்த மத்திய அரசு.. மதிப்புமிக்க மரியாதை.. நன்றி கூறிய நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை: தனக்கு சிறப்பு விருது வழங்கும் மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதாவது இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் அளித்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி ஆஃப் ஐஃபா 2019 என்ற விருது வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் டிவிட்
சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு இந்த விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கோவாவில் நவம்பர் 20 முதல் 28 தேதி வரை சர்வதேச திரைப்பட விழாவின் 50வது ஆண்டின் பொன் விழா நடைபெறுகிறது.

ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது
இந்த விழாவில் ரஜினிக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினியிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

வாழ்த்து
மத்திய அரசின் விருது அறிவிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு நன்றி
இந்நிலையில் மத்திய அரசின் இந்த சிறப்பு விருது அறிவிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழாவில் எனக்கு இந்த மதிப்புமிக்க மரியாதை வழங்கப்படுவதற்கு இந்திய அரசுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











