மொழி தெரியாமல் கையில் காசு இல்லாமல் ரயில் ஏறினேன்.. வாழ வைத்த தமிழக மக்கள்.. கண்கலங்கிய ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார் டிஜே ஞானவேல். முன்னதாக சூர்யா நடிப்பில் ஜெய் பீம் என்ற படத்தை கொடுத்துள்ள டிஜே ஞானவேலுக்கு இரண்டாவது படமே சூப்பர் ஸ்டாருடன் காம்பினேஷனில் அமைந்துள்ளது. இந்த படத்தை அவர் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளதாக ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிஜே ஞானவேல் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத நிலையில் அவரது டைரக்ஷன் மிகப்பெரிய அளவில் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம் வேட்டையன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மாஸாக, சூப்பர் ஸ்டாராக, தலைவராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர். அபூர்வ ராகங்கள் படத்தில் துவங்கிய இவரது திரைப்பயணம் தற்போது வேட்டையன், கூலி என தொடர்ந்து வருகிறது. இவரது 170வது படமாக வேட்டையன் படம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 10ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டும் வரும் நிலையில் அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது.
வேட்டையன் இசை வெளியீடு: இதனிடையே நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் பங்கேற்ற ரஜினிகாந்த் பேச்சை கேட்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். நிகழ்ச்சியில் பல சுவாரசியங்கள் இருந்த போதிலும் ரஜினி சொன்ன கழுதை -டோலி கதை, அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பல மலரும் நினைவுகள் மற்றும் படம் குறித்த சுவாரசியங்கள் குறித்த பேச்சு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. தன்னுடைய பேச்சால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நேற்றைய தினம் மீண்டும் கட்டி போட்டுள்ளார் ரஜினிகாந்த். படத்தில் தன்னுடன் நடித்த ஒவ்வொரு நடிகர்கள் குறித்தும் அவர் தன்னுடைய கருத்துக்களை சொல்ல தவறவில்லை.
தளதளவென இருந்த மஞ்சு வாரியர்: நடிகை மஞ்சுவாரியரை தன்னுடைய ஜோடி என்று கூறிய போது அவரை தான் பார்த்ததாகவும் அவர் தளதளவென இருந்ததாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். இதேபோல பகத் ஃபாசில் போன்று அசாத்தியமான நடிகரை தான் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். இதனிடையே, படத்தின் மற்றொரு நாயகியான துஷாரா விஜயன் கிழிந்த ஜீன்ஸ், கூலிங்கிளாஸ் சகிதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்ததையும் சுட்டி காட்டியுள்ளார். ராணாவின் நடிப்பை பார்த்து தானே மிரண்டு போனதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதனிடையே அமிதாப்பச்சன் குறித்த பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
அமிதாப் குறித்து பாராட்டு: அமிதாப்புடன் தான் 3 படங்களில் நடித்துள்ளதை குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் தன்னுடைய அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்ற அமிதாப்பச்சன், போராடி மூன்று ஆண்டுகளில் இழந்த தன்னுடைய வீடு உள்ளிட்ட அனைத்தையும் மீட்டது குறித்து பாராட்டையும் பெருமிதத்தையும் தெரிவித்துள்ளார். முன்னதாக அமிதாப் பச்சனை பல படங்களில் நடிக்க வைக்க ரஜினிகாந்த் முயன்ற நிலையில் வேட்டையன் படத்தில் அது சாத்தியமாகியுள்ளது. டிஜே ஞானவேல் குறித்தும் தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ள ரஜினிகாந்த் தனக்கு கருத்துப்படம் சரிப்பட்டு வராது என்று அவரிடம் கூறியதாகவும் அவரும் கமர்சியல் தளத்தில் வேட்டையன் படத்தை இயக்கி முடித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
கண்கலங்கி பேசிய ரஜினி: தொடர்ந்து தான் நடிகனாகும் ஆசையில் கன்னட மொழி மட்டுமே தெரிந்தநிலையில், தமிழ் மொழி தெரியாமல் கையில் காசு இல்லாமல் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியதாகவும் ஆனால் தன்னுடைய நம்பிக்கையை தமிழக மக்கள் பொய்யாக்கவில்லை என்றும் கண் கலங்கியபடி பேசினார். தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். அவரின் இந்த பேச்சின் போது ரசிகர்கள் அவ்வப்போது ஆரவாரம் செய்த நிலையிலும் அவரது பேச்சை அரங்கத்தினர் அனைவரும் அமைதியாகவும் கேட்டது நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











