Rajinikanth - என்.டி.ஆர் நூற்றாண்டு விழா - விஜயவாடா சென்றார் ரஜினிகாந்த்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விஜயவாடா சென்றார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் என்.டி.ராமாராவ். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் மூன்று முறை தேசிய விருதை வென்றுள்ளார். தமிழில் அவர் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் ஜொலித்தவர் ராமாராவ். நடிகர் பாலகிர்ஷ்ணா இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலைவர்: நடிகராக மட்டுமின்றி 1982ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலுக்குள் நுழைந்தார். அதன் பிறகு 1983ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டுவரையிலும், 1994 முதல் 1995வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோருடனும் நட்பாக பழகிய அவர், எம்ஜிஆருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டிருக்கிறார்.
நூற்றாண்டு விழா: 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி பிறந்த அவர் 1996ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி உயிரிழந்தார். அவர் பிறந்து 100 வருடங்கள் ஆவதையொட்டி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட அவரது மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா முடிவு செய்தார். இதற்காக இந்தியாவிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். அந்தவகையில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பாலகிருஷ்ணா வெளியிட்ட வீடியோ: இதுகுறித்து பாலகிருஷ்ணா வெளியிட்டிருந்த வீடியோவில், "வரும் 28ஆம் தேதியன்று விஜயவாடாவில் மறைந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன், நானும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்" என தெரிவித்திருந்தார்.

விஜயவாடா சென்ற ரஜினிகாந்த்: இந்நிலையில் ரஜினிகாந்த் விமானத்தின் மூலம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக விஜயவாடா சென்றார். ஏர்போர்ட்டில் ரஜினி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











