தேசிய விருது வென்ற சூர்யா, சூரரைப் போற்று டீமுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
சென்னை : டைரக்டர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்து 2020 ம் ஆண்டு ரிலீசான படம் சூரரைப் போற்று. கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக இந்த படம் உருவாக்கப்பட்டது.

சாமானிய மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்க குறைந்த கட்டணத்தில் விமான பயணம் என்பதை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது.இந்த படத்தில் மாறன் என்ற ரோலில் சூர்யா நடித்திருந்தார்.
கொரோனா தொற்று காலத்தில் ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ததற்காக கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இந்த படம் எதரி்ப்புகளை மீறி ரசிகர்களின் ஆதரவுடன் சர்வேதச கவனத்தை ஈர்த்து, 35 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றது. ஆஸ்கர் விருது வரை சென்றது.
இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப் போற்று படம் முக்கிய பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இந்த படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சூர்யா மற்றும் சூரரைப் போற்று டீமுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளின் கீழ் சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தையும் சுதா கொங்கரா இயக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இதில் சூர்யா நடித்த ரோலில், இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.
இந்த சமயத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் ,சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என ரஜினி குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த ட்வீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த்தும் ட்விட்டரில் வாழ்த்து பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











