பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. திரையுலகினர் இரங்கல்!
மும்பை: பிரபல நடிகர் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
பாலிவுட்டில் கபூர் குடும்பம் பிரபலமானது. மொத்தக் குடும்பமும் சினிமா துறையில் கொடி கட்டி பறக்கின்றன.
பாலிவுட்டின் முன்னாள் ஹீரோ ராஜ்கபூருக்கு ரன்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜீவ் கபூர் ஆகிய மகன்களும் ரித்து நந்தா, ரீமா ஜெயின் ஆகிய மகள்களும் உள்ளனர்.

நடிகர் ராஜீவ் கபூர்
இதில் ரன்தீர் கபூர், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். ரிஷிகபூர் பாலிவுட்டின் முன்னாள் ஹீரோ. இவர் கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் மரணமடைந்தார். இந்நிலையில் அவருடைய தம்பி ராஜீவ் கபூர் இன்று மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 58.

ராம்தேரி கங்கா மைலி
இவர், இந்தியில், நாக் நாகின், ஹம் து சலே பர்தேஸ், ஆங்காரே, லவ்வர் பாய், ராம் தேரி கங்கா மேலி, மேரா சாதி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஹென்னா உட்பட சில படங்களை தயாரித்துள்ளார். ரிஷி கபூர், மாதுரி தீக்ஷித் நடித்த பிரேம் கிராந்த் படத்தை இயக்கி தயாரித்து இருந்தார்.

மாரடைப்பு காரணமாக
இந்நிலையில், அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து நடிகை நீது கபூர் சமூக வலைத்தளத்தில் அவர் இறந்ததை உறுதி செய்துள்ளார்.

திரையுலகினர் இரங்கல்
ராஜீவ் பற்றி ரந்தீர் கபூர் கூறும்போது, என் தம்பி ராஜீவ் இறந்துவிட்டார். மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. உடலை வாங்கிச் செல்ல காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லதா மங்கேஸ்கர்
பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'ராஜ்கபூரின் இளைய மகனும் சிறந்த நடிகருமான ராஜீவ் கபூர் இறந்துவிட்டதாக வந்த செய்தியை இப்போதுதான் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











