நடிகர் ராஜ்கிரணுக்கு இன்று 66வது பிறந்தநாள்... வாழ்த்து மழை பொழிந்த திரை பிரபலங்கள்!
சென்னை : நல்லி எலும்பு கடி, முதுகெலும்பு உடையும் சண்டை காட்சிகள் என தமிழ் மக்களின் எதார்த்தமான ஹீரோவாக இன்றுவரை நடித்துக்கொண்டு வருபவர் நடிகர் ராஜ்கிரண்.
Recommended Video
திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமான ராஜ்கிரண், பின் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் நடித்ததன் மூலம் இன்றுவரை புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார்.
தனித்துவமான சண்டைக்காட்சிகள், மிரட்டும் நடிப்பு என தனக்கே உரித்தான பாணியில் இன்றுவரை பல்வேறு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ராஜ்கிரண் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு தமிழ் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தயாரித்த கையோடு
இப்போதுள்ள சூழலில் இயக்குனர்கள் பலரும் ஹீரோக்களாக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமான ராஜ்கிரண், சொந்த தயாரிப்பில் ராமராஜன் நடித்த "ராசாவே உன்ன நம்பி மற்றும் என்ன பெத்த ராசா" போன்ற வெற்றித் திரைப்படங்களை தயாரித்த கையோடு தனது மூன்றாவது தயாரிப்பான "என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

வடிவேலு நடிகராக அறிமுகம்
ராஜ்கிரண் உடன் இணைந்து மீனா, ஸ்ரீவித்யா, வடிவேலு, செந்தில் மற்றும் கவுண்டமணி உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் நடித்திருக்க இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்து வெள்ளி விழா கொண்டாடியது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் வடிவேலு முதன்முறையாக நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ரீமேக்
இவ்வாறு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்த ராஜ்கிரண் "அரண்மனை கிளி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். 1993 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ராஜ்கிரண் இயக்கி நடித்ததோடு தயாரித்தும் வெளியிட்டு இருந்தார். பின் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று கன்னடா மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆனது.

கர்ஜனையோடு ரீ-என்ட்ரி
இவ்வாறு தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ராஜ்கிரண் வீரத்தாலாட்டு திரைப் படத்தில் நடித்ததற்கு பின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில், இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான நந்தா திரைப்படத்தில் கர்ஜனையோடு செம மாஸான கதாபாத்திரத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

மிரட்டும் நடிகராக
தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் நடித்த திரைப்படங்கள் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில் இவர் நடிப்பில் வெளியான நந்தா, பாண்டவர்பூமி, தவமாய் தவமிருந்து, மற்றும் சண்டைக்கோழி போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான பல்வேறு விருதுகளையும் வாங்கி மக்கள் மத்தியில் இன்றளவும் மிரட்டும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நம்பிக்கைக்கு செய்யும் துரோகம்
ஓரிரு திரைப்படங்களில் நடித்த நடிகர்களே கணிசமான சம்பளம் கொடுத்தாலே விளம்பரப் படங்களில் நடிக்க தயாராக இருக்கும் நிலையில், பிரபலமான நிறுவனமொன்று கோடிக்கணக்கில் சம்பளம் தர தயாராக இருந்தும் ராஜ்கிரண் விளம்பர படங்களில் நான் நடிக்க மாட்டேன், அது என் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் செய்யும் துரோகம் அதை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன் என இன்றுவரை எந்த ஒரு விளம்பரங்களில் நடிக்காமல் ரசிகர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட சிறந்த நடிகராகவும், சிறந்த மனிதராக ராஜ்கிரண் இருந்து வருகிறார்.

66வது பிறந்தநாள்
இவ்வாறு தனது மிடுக்கான மற்றும் தனித்துவமான நடிப்பின் மூலம் இன்றுவரை தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் நடிகர் ராஜ்கிரண் ஆகஸ்ட் 26 ஆம் தேதியான இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி தமிழ் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











