மனம் பதறுகிறது இறைவா.. நாங்குநேரி சம்பவம் குறித்து ஆதங்கப்பட்ட ராஜ்கிரண்!
சென்னை: நாங்குநேரியில் மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து நடிகர் ராஜ்கிரண் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்2 மாணவர் சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டியது.
இதில் படுகாயமடைந்த மாணவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிறுவர்கள் கைது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தப்பியோடிய மாணவர்கள் 3 பேர் மற்றும் அவருக்கு உதவியவர்கள் என இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாணவன் வெட்டப்பட்ட இடத்தை பட்டியலின ஆணைய உறுப்பினர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.
ஆதங்கப்பட்ட ராஜ்கிரண்: இந்த கொடூரமான சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ராஜ்கிரண் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம்.யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை.
ஒரே தாய் பிள்ளைகள் போல்: ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம். எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.
இறைவா: இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது என நாங்குநேரி அவலம் குறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











