ஒரு நாள் சம்பளம் 75 பைசா.. இளையராஜாவிற்கு டிபன் பரிமாறினேன்.. மனம் திறந்த ராமராஜன்!
சென்னை: எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் ராமராஜன். இவர் நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. உதவி இயக்குனராக சினிமாவிற்குள் வந்த இவர் பிறகு இயக்குனராக மாறி பின் முழுநேர நடிகரானார். தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் ராமராஜன் சிறந்த நடிகர் இல்லையா என்பது வேறு விஷயம். அவருக்கு டான்ஸ் ஆட வருமா, வராதா என்பதும் வேறு விஷயம். ஆனால் அவரது படங்கள், குறிப்பாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து கொடுத்த அத்தனை படங்களுமே மக்களின் மனதை மயக்கிப் போட்டன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவரின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கிய பங்கு வகித்தது.

நடிகர் ராமராஜன்: இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தைப் போல, எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு, பாட்டுக்கு நான் அடிமை போன்ற திரைப்படங்கள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. பல ஆண்டுகளான சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ராமராஜனின் நடிப்பில் தற்போது சாமானியன் படம் வெளியாக உள்ளது.
பாட்டுதான் பிளஸ்: இந்நிலையில், ராமராஜன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நான் சினிமாவில் 1986ம் ஆண்டு முதல் 1990 வரை நான்கு வருடம் மட்டும் தான் நடித்தேன் அதன் பிறகு நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவை தான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இப்போது பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் என் படத்தில் வரும் பாட்டு, பல தியேட்டரில் என் பாட்டை ஒன்ஸ் மோர் கேட்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அண்ணன் இளையராஜா தான்.
பெருமையாக நினைக்கிறேன்: இளையராஜா சாருக்கும் எனக்கும் அவ்வளவு ஒரு நெருக்கம் இருந்தது, என் ஆரம்ப கால சினிமாவில் நான் அவருக்கு டிபன் பறிமாறி இருக்கிறேன். காரைக்குடியில் அன்பே சங்கீதா படத்தின் கம்போசிங்கிற்காக இளையராஜா காரைக்குடி வந்திருந்தார். அப்போது நான் உட்லண்ஸ் ஓட்டலில் இருந்து டிபன் வாங்கிக் கொண்டு வந்து அவருக்கு பறிமாறினேன். அதை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதை நான் என் பாக்கியமாக கருதுகிறேன்.

ரஜினி படத்தை விட: 1989ம் ஆண்டு ஒரு தீபாவளிக்கு நான் நடித்த அன்பு கட்டளை, தங்கமான ராசா திரைப்படம் வெளியானது. அந்த நேரத்தில் ரஜினி நடித்த மாப்பிள்ளை, கமல் நடித்த வெற்றி விழா திரைப்படம் வெளியானது. அந்த ஒரே ஒரு முறை தான் ரஜினிகாந்தின் மாப்பிள்ளை படத்தை விட என் படம் வசூலில் முந்திச் சென்றது. அதன்பிறகு நான் பிந்தித்தான் இருக்கிறேன். ஆனால், ரஜினி என்னைக்குமே ஸ்டார் தான்.
ஒரு நாளைக்கு 75 பைசா: நான் சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்தே, பட்ஜெட் படத்தில் தான் நடித்துக்கொண்டு இருந்தேன். பெரிய பட்ஜெட் படத்திற்கு நான் போகவில்லை. நான் தியேட்டரில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது எனக்கு ஒரு நாளைக்கு 75 பைசா நான் சம்பளம், ஆனால், அதன் பிறகு பல லட்சம் சம்பாதித்தேன். அதே நான் சினிமாவில் ஹீரோவா நடிக்க வேண்டும் என்று நினைக்க இல்லை அதுவாக அமைந்துவிட்டது என்று நடிகர் ராமராஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











