சின்னத்திரையில் முதல்முறையாக.. தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.. நெகிழ்ந்துபோன அமுதவாணன்
சென்னை: நடிகர் ராமராஜன் முதல்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். மேலும் அவர் அமுதவாணனுக்கு தங்கமோதிரத்தையும் பரிசளித்தார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக கோலோச்சியிருந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர் ராமராஜன். உயரம் கம்மியான உருவம், சினிமாவுக்குரிய இலக்கணம் இல்லாத உடல்வாகு என முத்திரை குத்தப்பட்டாலும் தனது திறமையால் முன்னேறியவர் ராமராஜன்.

ரஜினி, கமலுக்கு இணையாக ராமராஜன்
ராமராஜனின் திரை வாழ்க்கையையே புரட்டிப்போட்ட படம் என்றால் கரகாட்டக்காரன். தில்லானா மோகனாம்பாள் படத்தின் கிராமத்து வெர்ஷனாக உருவாகியிருந்த அந்தப் படத்தை கங்கை அமரன் இயக்கியிருந்தார். 1989ஆம் ஆண்டு வெளியான அப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். படமும், பாடல்களும் மெகா ஹிட்டாகின. அதிலிருந்து ராமராஜனின் கிராஃப் உச்சத்தை தாண்டி சென்றது. ரஜினி கமல் ஹாசனுக்கு இணையாக அவர் உயர்ந்தார்.

சினிமா, அரசியலிலிருந்து ஒதுங்கிய ராமராஜன்
கரகாட்டக்காரனுக்கு முன்பு சில படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் கரகாட்டக்காரனுக்கு பின்பு அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. இந்தச் சூழலில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. நிலைமை இப்படி இருக்க சினிமாவிலிருந்து ஒதுங்கிய ராமராஜன் அரசியலில் கவனத்தை திருப்பினார். ஆனால் அதிலிருந்தும் ஒருகட்டத்துக்கு மேல் ஒதுங்கினார்.

ராமராஜன் எனும் சாமானியன்
பல வருடங்கள் திரையில் தனது முகத்தை காண்பிக்காமல் இருந்த ராமராஜன் தற்போது சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராகேஷ் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தையும் ஈர்த்துள்ளது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

சின்னத்திரையில் முதல்முறையாக
இந்நிலையில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ராமராஜன் கலந்துகொண்டிருக்கிறார். இந்த வாரத்திற்கான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ராமராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
பிக்பாஸ் புகழ் அமுதவாணன் ராமராஜனுக்கு முன் மதுர மரிக்கொழுந்து வாசம் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அதனைப் பார்த்த ராமராஜன்; அமுதவாணனுக்கு தங்க மோதிரத்தை பரிசளிக்கிறார். அதனை அமுதவாணன் நெகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











