Naaga Bandham: சிலிர்ப்பூட்டும் சாகசம்.. ராணா வெளியிட்ட நாக பந்தம் படத்தின் பர்ஸ்ட் லுக்!
சென்னை: எந்த காலத்திலும் பிரம்மாண்டங்களை துணையாக கொண்டு சிறப்பான கதை அம்சத்துடன் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் பிரம்மாண்டங்களின் வரிசையில் தற்போது நாக பந்தம் படம் இணைந்துள்ளது.
பிரம்மாண்டத்துடன் பழமையான புராணத்தையும் கதைக்களமாக கொண்ட படங்களுக்கு மேலும் ரசிகர்களின் ஆர்வம் அதிகமாகவே காணப்படும் நிலையில், பான் இந்தியா படமாக அடுத்ததாக உருவாகி வருகிறது நாக பந்தம். விராத் கருணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படத்தை அபிஷேக் நாமா இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நாக பந்தம் படம்: நடிகர் விராத் கர்ணா, ஐஸ்வர்யா மேனன், நபா நடேஷ், ஜெகபதிபாபு, ஜெயப்பிரகாஷ் முரளி சர்மா உள்ளிட்ட பலர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நாக பந்தம் படம் பான் இந்தியா படமாக சிறப்பான வகையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ருத்ரா என்ற கேரக்டரில் இளம் ஹீரோ விராத் கர்ணா நடித்து வருகிறார். அவரது பிரீ லுக் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டுள்ளார்.
தி சீக்ரெட் ட்ரெஷர்: அபிஷேக் நாமா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்த படம் சாகசங்கள் கலந்த காவிய படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தி சீக்ரெட் ட்ரெஷர் என்ற டேக்லைனை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். இது ரசிகர்கள் இடையே மிகச்சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை என்ஐகே ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கிஷோர் அன்னபு ரெட்டி மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் படம் உருவாகி வரும் நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
நாக பந்தம் பர்ஸ்ட் லுக்: இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் விராத் கர்ணா துணிச்சலான கேரக்டரில் அச்சுறுத்தும் கடலில் முதலையிடம் சண்டையிடுவதாக காணப்படுகிறது. முதலையின் வாயை திறந்து கயிறு மற்றும் கைகள் மூலமாக துணிச்சலுடன் அவர் போராடுவதாக இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது. இது மட்டுமில்லாமல் மிகவும் சிறப்பான உடல் கட்டுடன் ரத்தக்களரியாக முதலையுடன் அவர் போராடுவதாகவும் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. சாகசம் கலந்த காவிய படமாக நாக பந்தம் உருவாகி வருகிறது. ஆன்மீக மற்றும் சிலிர்ப்பூட்டும் சாகசத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதைன்களம் உருவாகி வரும் சூழலில் படத்திற்கு அபே இசையமைத்து வருகிறார்.
மறைக்கப்பட்ட ரகசியம்: இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோயில்களில் மறைக்கப்பட்ட ரகசியத்தை இந்த படம் ஆய்வு செய்வதாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நாக பந்தத்தின் புனிதமான நடைமுறையை படத்தின் கதைக்களம் கொண்டுள்ளதாகவும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகந்நாத் போன்ற ஆலயங்களில் சமீபத்தில் புதையல் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தெய்வீக இடங்களில் வசீகரிக்கும் இடங்களையும் புராணங்களின் அடிப்படையிலும் படம் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
பான் இந்தியா படம்: புனிதமான மற்றும் புதிரான சடங்குகளையும் இந்த படம் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பழமையான மர்மங்களை கையாண்டுள்ள இந்த படம் நவீன கதையம்சத்தையும் கொண்டுள்ளதாக படக்குழுவினர் உற்சாகம் தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி வருவதாகவும் இந்த ஆண்டிலேயே படம் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் மேலும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











