Vijayakanth - விடுப்பா என் கண் பிரச்னை அவங்களுக்கு தெரியாதுல்ல..கிண்டல் செஞ்சவங்கள பொறுத்துக்கொண்ட விஜயகாந்த்
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்திருக்கும் சூழலில் பலரும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். மேலும் சிலர் விஜயகாந்த்துடன் தாங்கள் பழகிய நினைவுகளையும் உருக்கமாக பகிர்ந்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஞ்சித் பகிர்ந்திருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜயகாந்த் என்றாலே அவரது சாமானியத்தனமான முகமும், வெகுளித்தனமான குணமும் நியாபகத்துக்கு வரும். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு பலத்த போட்டியாக திகழ்ந்தவர். அதேபோல் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருமே அரசியலில் படு ஆக்டிவ்வாக இருந்தபோது விஜயகாந்த் உள்ளே வந்து பெரும் புயலை கிளப்பினார் என்பதுதான் உண்மை. ஒருகட்டத்தில் இருவருமே விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

உடல்நலக்குறைவு: அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறி பிறகு அரசியலில் சறுக்கலை சந்தித்தார் அவர். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுவிட்டது. அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு ஓய்வில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழப்பு: எப்படியும் சிகிச்சையின் துணையோடு கேப்டன் மீண்டு வந்துவிடுவார் என்று ரசிகர்களும், தொண்டர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உடல் இப்போது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ரஞ்சித் நினைவுகள்: விஜயகாந்த் உயிரிழந்திருக்கும் சூழலில் அவர் குறித்தும் அவருடன் பழகிய நினைவுகள் குறித்தும் பலர் பகிர்ந்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஞ்சித் தனது முகநூல் பக்கத்தில், "நான் பார்த்து என்னோடு பழகிய நடிகர்களிலேயே எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமானவர்.
என் மீது பாசம் கொண்டவர்.. உதவி கேட்டு வந்தவர்க்கு இயன்றதை செய்தவர். தன் ரசிகர்களுக்கும் ஏழை மக்களுக்கும் தன் பணியாளர்களுக்கும் ஏராளமான உதவிகள் செய்தவர்..
அன்னையானவர்: தன் சொந்த சம்பாத்தியத்தில் தினமும் மூன்று நேரமும் ஏழைகளுக்கு அன்னதானமிட்டு அன்னையானவர்.. அரசியலுக்கு வந்த பின்
பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பில் என்னோடு கைபிடித்து நடக்கையில் அவர் தடுமாறிய பொழுது சுற்றி நின்ற பொதுமக்கள் ஏதோ இவர் போதையில் இருப்பதாக கேலியும் கிண்டலுமாக சிரித்தனர்..
எனக்கு கோவம் வந்து திட்ட ஆரம்பிக்கும் முன் என் கையை இறுக பிடித்த அவர் வேண்டா ரஞ்சித்து.. எனக்கிருக்கும் கண் பிரச்னை மக்களுக்கு தெரியாதல்ல...விடுங்க தம்பி நமக்கு அரசியல்காரய்ங்களும் ஊடகங்களும் செஞ்ச சேவையாலே கிடைச்ச நல்லபேரு என்றார்.
மன்னித்த கேப்டன்: ஒரு நாள் இவரை மேடை மேடையாக கேவலமாக திட்டி விமர்சித்த ஒரு நடிகர் திடீரென்று தளத்திற்கு வந்து நலம் விசாரித்தார். அவர் அப்படி அரசியல் மேடையில் திட்டியதற்கு மன்னிப்பும் கேட்டார். கேப்டன் உடனே அவர் கையை இறுக பற்றி மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க...நீங்க யாரை திட்டினிங்க.. என்னையத்தானே... இந்த உரிமை கூட உங்களுக்கில்லயா என அவரிடமே கூறி அனுப்பிய பின் என்னிடம் தனியாக அந்த நடிகர் நல்லவர் பாவம்...என்னைய பத்தி திட்றதுக்கு தான் இவிங்க காசு குடுக்கறாய்ங்க.... அதனாலதான் எல்லாருமே என்னய திட்றாய்ங்க.. இவிங்களாக திட்டல திட்ட வைக்கிறாய்ங்க..
எல்லாரும் நல்லாருக்கட்டும் என்று தோளில் தட்டியவாறு வெகுளியாக சிரித்தார்.. என் மனம் நனைந்தது.. ஒன்றா இரண்டா இவரைப்பற்றி சொல்ல... உண்மையிலயே நல்ல மனுசன்ங்க.. நல்ல மனிதம் நமக்குள் சுவாசித்து கொண்டிருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











