Ravikumar Death: பிரபல நடிகர் மரணம்.. மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!
சென்னை: கே பாலசந்தர் இயக்கிய " அவர்கள் " படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்து புகழ் பெற்ற ரவிக்குமார் இன்று காலமானார். சென்னையில் வசித்து வரும் ரவிக்குமாருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

நடிகர் ரவிக்குமாரை பார்க்கும் போதெல்லாம் ஸ்ரீதேவியுடன் பகலில் ஒரு நிலவு திரைப்படத்தில் வரும் 'இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு' என்ற பாடல் தான் நினைவுக்கு வரும். இந்த திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், தற்போது வரை அந்த பாடல்களை பலர் பாடி வருகின்றனர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவரின் அப்பா, மலையாள திரைப்பட தயாரிப்பாளர் கே.எம்.கே.மேனன் ஆவார்.
நடிகர் ரவிக்குமார்: சினிமா மீது ஈடுபாடு கொண்ட இவர், 'லக்ஷப்பிரபு' என்ற மலையாளத் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய 'அவர்கள்' என்ற தமிழ் படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக 'பரணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பகலில் ஒரு நிலவு படத்தில் நடித்தார். அந்த படமும் இவருக்கு பெயரை பெற்றத்தந்தது. அதன்பின், அங்காடி, மதுரிக்குன்ன ராத்திரி, ஏதோ ஒரு ஸ்வப்னம், தச்சோளி அம்பு, லிசா, அலாவுதீனும் அற்புத விளக்கும், உல்லாச யாத்ரா, ஈ மனோகர தீர்த்தம், அவர்கள் என 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள என இரண்டு மொழிப்படத்திலும் மாறி மாறி நடித்தார். தமிழில் இவர் கடைசியாக ஆர்ஜே பாலாஜி நடித்த வீட்டுல விசேஷம் படத்தில்நடித்திருந்தார்.

சித்தி சீரியல்: திரைப்படங்கள் மட்டுமில்லாமல், பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற சித்தி சீரியலில் அவரின் அப்பா ஈஸ்வரபாண்டியன் கதாபாத்திரத்தில் ரவிக்குமார் நடித்திருந்தார். மேலும் ராதிகாவின் வாணி ராணி, செல்லமே, செல்வி, அரசி என பல தொடர்களில் நடித்தார். இவர் பிரபல நடிகை சுமித்ராவின் முன்னாள் கணவர் ஆவர். இருவரும் திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து, நடிகர் ராம் குமார், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி மூலம், ரவிக்குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மருத்துவமனையில் உயிர் பிரிந்தது: இந்நிலையில், சென்னையில் வசித்து வரும் ராம் குமார், புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரின் உடல், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட உள்ளதாகவும், நாளை மாலை மூன்று மணி அளவில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும், நடிகர் ரவிக்குமாரின் மகன் தெரிவித்துள்ளார். பழம் பெரும் நடிகரின் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த வாரம் பாரதிராஜாவின் மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து யாரும் மீளாத நிலையில், ரவிக்குமாரின் இழப்பு பலரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











