என்னோட 1 கோடி ரூபாய் வடிவேலுவிடம் இன்னமும் இருக்கு.. அவர் கொஞ்சம் இறங்கி வரணும்.. ஆர்கே பேச்சு!
சென்னை: நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே என அழைக்கப்படும் ராதா கிருஷ்ணன் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும் போது, வைகப்புயல் வடிவேலுவிடம் தான் கொடுத்த ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் இன்னமும் உள்ளது என்றும் அவர் தன்னுடைய படத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்க சம்மதம் தெரிவித்தால் நல்லா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஷங்கரின் தயாரிப்பில் வடிவேலு நடித்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ரெட் கார்டு போடப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தார் வடிவேலு. லைகா தயாரிப்பில் உருவான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த வடிவேலுவுக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

சந்திரமுகி 2 படத்தில் மீண்டும் காமெடி நடிகராக நடித்துக் கலக்கினார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் கேங்கர்ஸ் திரைப்படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியுள்ளார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரைலர் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்து வருவதாகவும், தான் கொடுத்த அட்வான்ஸ் அவரிடம் உள்ளதாகவும் நடிகர் ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வெயிட்டுக் காட்டும் வடிவேலு: மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் பாசிலுடன் இணைந்து வடிவேலு நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் வடிவேலுவால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என மலைத்துப் போனார்கள். அடுத்ததாக தற்போது ஃபகத் பாசில் உடன் இணைந்து மாரீசன் படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் அந்த படமும் திரைக்கு வர காத்திருக்கிறது.

சுந்தர். சியின் கேங்கர்ஸ்: வைகைப் புயல் வடிவேலு பல கெட்டப்புகளில் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் படத்தில் நடித்திருக்கும் டிரைலரை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். அதிலும் பெண் வேடம் மற்றும் கடைசியாக வரும் கழுத்துக்கு கீழே யோகா பண்ணுகிறேன் என்கிற வசனம் எல்லாம் சரவெடி. அரண்மனை 4 படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்சிக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக அவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கி வருகிறார்.
ஹீரோவா தான் நடிப்பேன்: நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி உள்ளிட்ட பலர் காமெடி நடிகர்களாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகின்றனர். ஒரு கட்டத்தில் வடிவேலு இனிமேல் காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் என்றும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றும் கூறி வந்த நிலையில், தன்னுடைய படத்தில் அவர் நடிக்காமல் போய்விட்டதாக நடிகர் ஆர்கே நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி அட்வான்ஸ் இருக்கு: வடிவேலு ஒரு படத்தில் நடிக்க சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தன்னுடைய படத்தில் நடிக்க அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை ஒரு கோடி ரூபாய் அவரிடம் இன்னமும் உள்ளது. வடிவேலு கொஞ்சம் இறங்கி வந்து என்னுடைய படத்திலும் அவர் காமெடி நடிகனாக நடித்தால் நன்றாக இருக்கும், அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக நடிகர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு டான் ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிருகங்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை மையமாக வைத்து ஒரு படத்தையும் அவர் உருவாக்கி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











