கமல்ஹாசனை சிறிய கூண்டிற்குள் அடைக்க விரும்பவில்லை.. ரோபோ சங்கர் வைத்த புதிய அடைமொழி!
சென்னை: உலகநாயகன் என்ற பெயரால் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். பல ஆண்டுகளாக இந்த பட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது தன்னை அந்த அடை மொழியால் அழைக்க வேண்டாம் என்று கமல்ஹாசன் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் இந்த முடீவு குறித்து பிரபல நடிகர் ரோபோ சங்கர் பேசியுள்ளார். உலக நாயகன் என்ற சிறிய வட்டத்திற்குள் நடிகர் கமல்ஹாசனை சுருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனை புதிய அடைமொழியால் கூப்பிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து தன்னை சிறப்பான படங்களில் இணைத்து வருகிறார். 70 வயதை கடந்த நிலையிலும் இவரது சுறுசுறுப்பு இளம் நடிகர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்து வருகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வருகிறது தக் லைஃப். இந்த படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தில் இணைந்துள்ளார். நாயகன் படம் இவர்கள் கூட்டணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அந்த வரிசையில் தக் லைஃப் படமும் இடம்பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கமல்ஹாசன்: இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை கற்கும் வகையில் அமெரிக்கா சென்றுள்ளார் கமல்ஹாசன். 70 வயதிலும் இவரது புதியவற்றை கற்கும் விருப்பம் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக தன்னுடைய தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்து தனியாகவும் படக்குழுவினருடன் இணைந்தும் கமல்ஹாசன் பேட்டிகளை கொடுத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் மீண்டும் சென்னை வரும் கமல்ஹாசன், அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளார்.
உலகநாயகன் டைட்டில் வேண்டாம்: இதனிடையே, தன்னை இனிமேல் உலகநாயகன் உள்ளிட்ட அடைமொழிகளால் அழைக்க வேண்டாம் என்று கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னை கமல்ஹாசன் என்றோ KH என்றோ அழைக்கும்படியும் அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலங்களாக சினிமாவின் என்சைக்கிலோபீடியாவாக, உலக நாயகனாக கொண்டாடப்பட்டுவரும் கமல்ஹாசன், இவ்வாறு கூறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முன்னதாக அஜித்தும் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களிடம் கேட்ட நிலையில், அவரை கமல்ஹாசன் பின்பற்றியுள்ளார்.
ரோபோ சங்கர் புதிய டைட்டில்: இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு குறித்து பேசியுள்ளார். கமல்ஹாசனை உலகநாயகன் என்ற சிறிய கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இனிமேல் விண்வெளி நாயகன் என்றும் அவர் பேசியுள்ளார். உலகத்திலேயே விண்வெளி நாயகன் என்ற பட்டத்தில் அவர்மட்டும்தான் சொந்தக்காரர் என்றும் இனிமேல் அடிக்கப்படும் போஸ்டர்களில் அவரை விண்வெளி நாயகன் என்றுதான் குறிப்பிட உள்ளதாகவும் கமல்ஹாசனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications