ரோபோ ஷங்கர் அவ்வளவுதான்னு சொன்னாங்க.. காதுபடவே பேசினாங்க.. மனதில் இவ்வளவு வலியோட இருக்கிறாரே!
சென்னை: நடிகர் ரோபோ ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள அம்பி படம் நாளை அதாவது மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ரோபோ ஷங்கர் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளதால், படம் காமெடி படமாக இருக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. படத்தின் புரோமோஷனில் ரோபோ ஷங்கர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்கள் ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. ஏற்கனவே தனுஷ் குறித்து பேசிய ரோபோ ஷங்கர், தான் மஞ்சள் காமாலையில் அவதிப்பட்டது குறித்தும் பேசியுள்ளார்.
இயக்குநர் பாஸ்ஸர் எஸ். எல்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள அம்பி படத்தில் அஸ்வினி சந்திரசேகர் ரோபோ ஷங்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், படத்தில் மோகன் வைத்யா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ரோபோ ஷங்கர் தனுஷ் குறித்து பேசும்போது, " நான் கஷ்டத்தில் இருந்த போது எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். கொரோனா காலகட்டத்தில் நானும் எனது குடும்பமும் மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். அப்போது எனக்கு பண ரீதியாக மிகப்பெரிய உதவி செய்தவர் நடிகர் தனுஷ் சார் தான்.

சாப்பாடு கிடைக்காது: தனுஷ் சார் என்னை உடம்புதான் ரோபோவுக்கு பெருசு. மத்தபடி குழந்தை மாதிரினு சொல்வார். கொரோனா காலத்தில் தனுஷ் சாரின் மேனேஜரிடம் இருந்து தனுஷ் அவர்களின் போன் நம்பரை வாங்கி, அவருக்கு போன் செய்து உதவி கேட்டேன். நான் பேசியதைக் கேட்ட பின்னர், போன வைங்க 10 நிமிடத்தில் பாருங்க என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். அதன் பின்னர் 10 நிமிடத்தில் நான் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய உதவி எனக்கு கிடைத்தது. நான் தனுஷ் சாருக்கும் நன்றி சொல்லனும். அவர் எனக்கு உதவி செய்ததை வெளியே சொல்ல வில்லை என்றால் எனக்கு சாப்பாடு கிடைக்காது" என்று பேசியுள்ளார்.
மஞ்சள் காமாலை: இது மட்டும் இல்லாமல், அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட காலகட்டம் குறித்து பேசியுள்ளார். அதாவது, நான் இரண்டு வருடம் மஞ்சள் காமாலையால் மிகவும் அவதிப்பட்டேன். அப்போது என்னால் 10 நிமிடம் கூட வெயிலில் நிற்க முடியாது. தினமும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மருந்தை நான் இப்போதும் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். மருந்து மட்டும் இல்லாமல், சாப்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். பத்தியச் சாப்பாடு தான் சாப்பிட்டு வருகிறேன். படப்பிடிப்புக்கு சென்றால் வீட்டில் இருந்தே சாப்பாடு எடுத்துக் கொண்டு படப்பிடிப்புக்குச் செல்வேன்.
மனைவி மற்றும் மகள்: என்னைத் திருமணம் செய்ததில் இருந்து இப்போது வரை எனக்காக இருப்பவர் எனது மனைவி மட்டும்தான். நான் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டபோது திரைத்துறையில் பலரும் ரோபோ ஷங்கர் அவ்வளவுதான் என்று எனது காது படவே பேசியுள்ளார்கள். ஆனால் என்னை மஞ்சள் காமாலையில் இருந்து முழுவதுமாக மீட்டுக் கொண்டு வந்து கொண்டு உள்ள எனது மனைவி மற்றும் மகளுக்கு நன்றிகள்" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











