தனுஷுக்கு குடை பிடிப்பார்.. இவ பெரிய ரதியானு திட்டுவார்..மாரி செல்வராஜ் பற்றி நடிகர் இப்படி சொல்றாரே
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வாழை. நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டோரும், மாரி செல்வராஜின் ஊரை சேர்ந்த சிறுவர்களும் நடித்த வாழை பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு படம் சூப்பர் ஹிட்டடித்தது. இப்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் என்ற படத்தை இயக்கிவருகிறார். தொடர்ந்து தனுஷை வைத்தும் ஒரு படம் இயக்கவிருக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வாழை படம் வெளியானது. தனது சிறு வயதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த வலியான நிகழ்வுகளை திரைக்கதையாக்கி ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். படிக்கும் சிறுவர்கள் படித்துக்கொண்டே வேலைக்கு செல்வதையும், வாழை தார் சுமப்பதில் உள்ள வலியையும், ஒரு ரூபாய் கூலி உயர்த்தி கேட்டதற்கு அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர் செய்யும் அலட்சியமும் என யாரும் பேசாத வாழ்வியலை துணிந்து பேசியிருந்தார் மாரி செல்வராஜ்.
சூப்பர் ஹிட்: படத்தில் சோகமான முடிவுதான் என்று முன்னரே தெரிந்திருந்தாலும்; படத்தில் பெரும்பாலான காட்சிகள் கலகலப்பாக போய்க்கொண்டிருந்ததை வெகுவாகவே ரசித்தார்கள் ரசிகர்கள். அதனையடுத்து படத்தின் கடைசி 30 நிமிடங்களில் ரசிகர்களை சீட்டிலேயே உறைய வைத்துவிட்டார் மாரி செல்வராஜ். படம் முடிந்து வெளியே வந்தவர்கள் ஒரு துக்க மனநிலையுடனே வந்தார்கள். மேலும் அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் சிறுவன் உணவு உண்ண முடியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததும் ஒருபக்கம் வலியையே கொடுத்தது.

கலக்கிய சிறுவர்கள்: படத்தின் இரண்டு தூண்கள் என்றால் சிவனணைந்தான் பெருமாள் (பொன்வேல்), சேகர் (ராகுல்). இவர்கள் இருவருக்கும் இதுவே முதல் படம். ஆனால் அதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் தங்களது நடிப்பில் கலக்கிவிட்டார்கள். அதேபோல் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாலும், மாரியின் மேக்கிங்காலும் படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.
உண்மை சம்பவம்: இந்தப் படத்தில் வந்த விபத்து காட்சி உண்மையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வாழைத் தார்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி விபத்துக்குள்ளானதில், தார்களின் மேலே உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். அதில் மாரி செல்வராஜின் அக்கா, சித்தப்பா மகன் என உறவினர்களும் இருந்தார்கள். இந்தப் படத்தை எடுக்கும்போதுதான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும்; மருத்துவமனையில் கூட சேர்ந்தேன் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படங்கள்: வாழை படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கிவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இப்படத்தை முடித்துவிட்டு தனுஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த இரண்டு படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் குறித்து நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் பேசியிருப்பது ஷாக்கை கொடுத்திருக்கிறது.
கார்த்திக் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கர்ணன் படத்தில் என்னுடைய தோழர்களும் தோழிகளும் வேலை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளாக பணியாற்றினார்கள். கடுமையான வெயிலில்தான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்கள். தனுஷ் தனக்கான ஷாட் முடித்ததும் கேரவனுக்குள் போய்விடுவார். இவர்கள் மர நிழலில் ஒதுங்கினால், 'டேய் வந்து வெயிலில் நில்லுங்க டா. பெரிய மகாராஜா வீட்டு பிள்ளைங்களா?' என்று திட்டுவார். தனுஷ் வந்தால் அவருக்கு மாரியே குடை பிடிப்பார். அதேபோல் ஹீரோயின் குடை பிடித்துக்கொண்டு நிற்பார்கள். பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் தங்களது தாவணியை வைத்து முக்காடு போட்டு நின்றால், 'இவளுங்க பெரிய ரதிங்க. வெயிலில் நிக்கமாட்டாளுக என்று சொல்லி அந்த முக்காடை எடுத்துவிட்டுவிடுவார். இதுதான் அவரது உண்மையான முகம்" என்றார்.


Click it and Unblock the Notifications











