அடப்பாவமே.. கொரோனா பாதிப்பால் தமிழ் நடிகர் மரணம்.. கில்லி படத்தில் கபடி போட்டி நடுவரே இவர் தான்
சென்னை: கில்லி, தூள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ரூபன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளார்.
குணசித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் திரைத்துறையில் பணியாற்றி வந்தவர் நடிகர் ரூபன்.
நுரையீரல் புற்றுநோய் காரணமாகவும் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலமானார்.

டிடிஆர் கதாபாத்திரம்
தமிழ் சினிமாவில் டிடிஆர் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் சிலர் மட்டுமே ரசிகர்கள் மனங்களில் இடம்பெறுவார். தரணி இயக்கத்தில் சியான் விக்ரம், ஜோதிகா நடிப்பில் வெளியான தூள் படத்தில் டிடிஆர் கதாபாத்திரத்தில் நடித்த ரூபன் நேற்று கொரோனா காரணமாக உயிரிழந்தது திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

கபடி போட்டி நடுவர்
இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் வெளியான மெகா பிளாக்பஸ்டர் படமான கில்லி படத்தில் கபடி போட்டியை நடத்தும் நடுவராக நடிகர் ரூபன் நடித்து இருப்பார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

54 வயது
சிறு சிறு வேடங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த ரூபன், சிறந்த கதாசிரியரும் கூட, ஏகப்பட்ட படங்களுக்கு கதாசிரியராகவும், துணை கதாசிரியராகவும் பணியாற்றி வந்தார். வாய்ப்பு கிடைக்கும் போது, அவ்வப்போது திரையில் தோன்றியும் ரசிகர்களை மகிழ்விப்பார். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அவருக்கு வயது 54.

நுரையீரல் புற்றுநோய்
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபனுக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட, நேற்று மாலை 4 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகள் இல்லை
மறைந்த நடிகர் ரூபனுக்கு சங்கீதா என்ற மனைவி மட்டுமே உள்ளார். அவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. நடிகர் ரூபனின் மறைவை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் ரூபனின் மனைவிக்கு ஆறுதல்களையும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரிலும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











