Salman Khan: சல்மானை இயக்கும் அஜித் பட இயக்குநர்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு கரண் ஜோஹர் கூட்டணி!
மும்பை: கடந்த 1998ம் ஆண்டில் வெளியான குச் குச் ஹோட்டா ஹை படத்தின்மூலம் தன்னை பாலிவுட்டில் சிறப்பான டைரக்டராக அறிமுகம் செய்துக் கொண்டார் கரண் ஜோஹர்.
ஷாருக்கான் மற்றும் கஜோல் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தில் சல்மான் கானும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சல்மான் கானுடன் இணையவுள்ளார் கரண் ஜோஹர்.

பாலிவுட்டில் சல்மான் கானை இயக்கும் அஜித் பட இயக்குநர்: பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் பாலிவுட்டில் சிறந்த இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், டிவி ஷோ தொகுப்பாளர் என பன்முகம் காட்டி வருபவர். இவரது கேரியர் கடந்த 1998ம் ஆண்டில் ஷாருக்கான் -கஜோல் இணைந்து நடித்த குச் குச் ஹோட்டா ஹை படத்தின்மூலம் துவங்கியது. அறிமுகப்படத்திலேயே தன்னை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய கரண் ஜோஹர், இந்தப் படத்தை சூப்பர் ஹிட்டாக்கினார். படத்தில் சல்மான் கானும் சிறப்பான கேரக்டரில் நடித்திருந்தார்.
இவர் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹனி படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. ரன்வீர் சிங், ஆலியா பட் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கரண் ஜோஹர் இயக்கியுள்ளார். படத்தில் ஜெயா பச்சன், ஷபனா ஆஸ்மி மற்றும் தர்மேந்திரா உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர்.
இந்நிலையில் குச் குச் ஹோட்டா ஹை படத்திற்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து கரண் ஜோஹர் மீண்டும் சல்மான் கானும் இணையவுள்ளார். கரண் ஜோஹர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை இயக்கவுள்ளார் பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தன். தமிழில் அஜித் உள்ளிட்டவர்களை வைத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ள விஷ்ணுவர்தனுக்கு பாலிவுட்டில் ஷெர்ஷா என்ற வெற்றிப் படத்தை கொடுத்து அனைவரையும் கவர்ந்து வெற்றிப்பட இயக்குநராக மாறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக அவர் சல்மான் கானை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டைகர் 3 படத்தில் கவனம் செலுத்தி வரும் சல்மான்கான், அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தை கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற நிலையில், தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான அளவில் ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளது.
தற்போது அதர்வாவின் தம்பி அகில் மற்றும் அதிதி ஷங்கர் லீட் கேரக்டரில் நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். விஷ்ணுவர்தன் கடைசியாக விஷாலின் யட்சன் என்ற படத்தை தமிழில் இயக்கியிருந்தார். இந்தப் படம் சரியாக போகாத நிலையில், தற்போது அகில் -அதிதி நடிப்பில் அடுத்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக சல்மான் கானை இயக்கவுள்ளார் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











