அதிர்ச்சியாகவும் மன அழுத்தமாகவும் உள்ளது.. நெருங்கிய நண்பனின் மரணத்தால் நொறுங்கிப்போன சந்தானம்!
சென்னை: நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மரணத்தால் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் நடிகர் சந்தானம்.
Recommended Video
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சேதுராமன். மருத்துவரான இவர் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படித்துள்ளார்.
சினிமா மீது இருந்த ஆர்வத்தில் திரைப்படங்களில் நடித்தார் சேதுராமன். நடிகர் சேதுராமன், நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.

திடீர் மரணம்
நேற்று இரவு 8 மணியளவில் சேதுராமனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சேதுராமன் உயிரிழந்ததாக 12 மணியளவில் தகவல் வெளியானது.

நெருங்கிய நண்பர்
36 வயதான சேது ராமன் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சேதுராமனின் மறைவு குறித்து அவரது நெருங்கிய நண்பரான சந்தானம் டிவிட்டியிருக்கிறார்.
மன உளைச்சல்
அதில், என் நெருங்கிய நண்பர் டாக்டர் சேதுவின் மறைவால் முற்றிலும் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்திருக்கிறேன் அவரது ஆன்மா அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும்.. இவ்வாறு நடிகர் சந்தானம் தனது வேதனையை தெரிவித்திருக்கிறார்.

இணைந்து நடித்துள்ளனர்
நடிகர் சந்தானமும் மறைந்த நடிகரான டாக்டர் சேதுராமனும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப் படம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா படத்திலும் இணைந்து நடித்தனர். சினிமாவை தாண்டியும் சந்தானத்திற்கும் சேதுராமனுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்து வந்தது.

தோல் மருத்துவர்
இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும். சேதுராமனின் இறப்பை நடிகர் சந்தானத்தால் ஏற்க முடியவில்லை என்பது அவரது உருக்கமான டிவிட்டர் பதிவிலேயே தெரிகிறது. தோல் மருத்துவத்தில் நிபுணரான சேதுராமன், Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.

மனைவி மகள்
இவரின் இந்த திடீர் மறைவு திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் மருத்துவத்துறையினரும் சேதுராமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த சேதுராமனுக்கு 2016ஆம் ஆண்டு திருணம் நடைபெற்றது. அவருக்கு உமையாள் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











