Santhanam: நயன்தாரா குழந்தைகளுக்கு தாய்மாமன் நான்தான்.. சந்தானம் கலகல!
சென்னை: நடிகர் சந்தானத்தின் நடிப்பில் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் ரிலீசாகியுள்ளது.
டிடி ரிட்டர்ன்ஸ் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களில் 6 கோடியை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தாண்டியுள்ளது.
படத்தின ரிலீசையொட்டி நடிகர் சந்தானம் முன்னதாக அதிகமான பேட்டிகளை தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் கொடுத்திருந்தார்.

நயன்தாரா தங்கை போன்றவர் என சந்தானம் நெகிழ்ச்சி: டிவியில் காமெடி ஷோக்களை செய்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவந்த நடிகர் சந்தானம், தொடர்ந்து சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். சிம்புவின் மன்மதன் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்த நிலையில், தொடர்ந்து அதிகமான படங்களில் முன்னணி நடிகர்களுக்கு இணையான காமெடி கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டார். இவரது காமெடிக்காகவே ஓடிய படங்களும் உண்டு.
ஆனால் ஒருகட்டத்தில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சபதம் ஏற்ற சந்தானம், அதற்காக தன்னுடைய உடலை சிறப்பாக்கி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் காமெடியனாக மீண்டும் முன்னணி நடிகர்களுடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி சந்தானம் நாயகனாக நடித்து டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படம் வெளியாகியுள்ளது. முன்னதாக தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
காமெடி ஹாரர் படமாக வெளியான இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தற்போது இதன் தொடர்ச்சியாக டிடி ரிட்டர்ன்ஸ் என்ற படம் வெளியாகியுள்ளது. சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். படம் சிறப்பான ஓபனிங்குடன் கடந்த இரு தினங்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிசீல் 6 கோடிகளை கடந்து வசூலித்துள்ளது.
சந்தானம் தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான அவரது படங்கள் எதுவும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க அவர் முடிவு செய்திருந்தார். அந்த வகையில் விக்னேஷ் சிவன் -அஜித் கூட்டணியில் உருவாகவிருந்த ஏகே62 படத்திலும் சந்தானம் கமிட்டாகியிருந்தார். படத்தில் அவரது கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தப் படம் தற்போது ட்ராப் ஆகியுள்ளது. இதனிடையே, முன்னதாக படத்தின் கதையை கூறுவதற்காக, சந்தானத்தை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து தடபுடல் விருந்து கொடுத்திருந்தார் விக்னேஷ் சிவன். இதனிடையே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ள சந்தானம், வல்லவன் படத்திலிருந்து தனக்கும் நயன்தாராவுக்கும் சிறப்பான ரிலேஷன்ஷிப் தொடர்ந்து வருவதாகவும் தன்னை நயன்தாரா அண்ணா என்றுதான் அழைப்பார் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அண்ணன் -தங்கையாக தங்களது உறவு தொடர்ந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார் சந்தானம். நயன்தாரா தனக்கு கூட பிறக்காத தங்கை என்று குறிப்பிட்டுள்ள சந்தானம், அவர்கள் வீட்டிற்கு சென்றபோது, அவர்களின் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் உட்காரவைத்து காது குத்தும் நிகழ்ச்சியை நடத்துவாரா என்று தான் நயன்தாராவிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால் தான் தாய்மாமன் சீர் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











